மூன்று தலைமுறை இணையும் படம் : மகன்கள் மற்றும் பேரனுடன் தர்மேந்திரா நடிக்கும் புதிய சினிமா..

 

தமிழில் சிவாஜி குடும்பம் போல், தெலுங்கில் நாகேஸ்வரராவ் குடும்பம் போல் இந்தியில் மூன்று தலைமுறை நடிகர்களை கொண்ட குடும்பம், நடிகர் தர்மேந்திரா குடும்பம்.

தர்மேந்திரா, தனது மகன்கள் சன்னி தியோல், பாபி தியோல் ஆகியோருடன் சேர்ந்து “APNE” என்ற படத்தில் நடித்திருந்தார். 2007 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

முன்னாள் குத்து சண்டை வீரராக இதில் தர்மேந்திரா நடித்திருப்பார். ஷில்பா ஷெட்டி, கத்ரினா கைஃப் உள்ளிட்டோரும் இதில் நடித்திருந்தனர்.

இப்போது இதன் இரண்டாம் பாகம் மீண்டும் தயாராகிறது, “APNE-2” என இந்த படத்துக்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது.

தர்மேந்திராவுடன் அவரது மகன்கள் சன்னி தியோல், பாபி தியோல் ஆகியோர் நடிப்பதுடன் பேரன் கரண் தியோலும் நடிக்கிறார். இவர் சன்னி தியோலின் மகன் ஆவார்.

அனில் சர்மா டைரக்ட் செய்யும் இந்த படத்தின் ஷுட்டிங் மார்ச் மாதம் பஞ்சாபில் தொடங்குகிறது. இதன் பின் ஐரோப்பிய நாடுகளில் படப்பிடிப்பு நடத்த உள்ளனர்.

அடுத்த ஆண்டு ( 2021) தீபாவளிக்கு படத்தை ரிலீஸ் செய்ய திட்டம்.

– பா. பாரதி