ஆறுமுகசாமியிடம் தினகரன் தரப்பு அளித்த பென் டிரைவ்:  ஜெ.சிகிச்சை வீடியோக்கள் அவற்றில் உள்ளதா?

சென்னை :

றுமுகசாமி ஆணையத்தில் டி.டி.வி. தினகரன் தரப்பினர் பென் டிரைவ் ஒன்றை சமர்ப்பித்துள்ளனர். அதில் ஜெயலலிதா சிகிச்சை வீடியோக்கள் இருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஒரு நபர் ஆணையத்தை தமிழக அரசு ஏற்படுத்தி உள்ளது. ஆறுமுகசாமி,  கடந்த நவம்பர் மாதம்  தனது விசாரணை துவங்கினார். இதற்காக அவருக்கு சென்னை எழிலகத்தில் அலுவலகம் அளிக்கப்பட்டுள்ளது.

ஜெயலலிதா மரணம் தொடர்பாக அரசு, அப்பல்லோ மருத்துவர்கள், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, தீபாவின் கணவர் மாதவன், தலைமை செயலாளர்களாக இருந்த ஷீலா பாலகிருஷ்ணன், ராம்மோகன்ராவ் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

ராஜா செந்தூர்பாண்டி

இந்த நிலையில் சசிகலாவின் உறவினர்களான தினகரன், கிருஷ்ணப்பிரியா, ஜெயல்லிதாவின் உதவியாளர் பூங்குன்றன் உள்ளிட்டோருக்கு ஆணையம் சம்மன் அனுப்பி, தங்களிடம் உள்ள ஆதாரங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில், தங்களிடம் உள்ள பென்டிரைவை தினகரன் தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டி பென் டிரைவ் ஒன்றை ஆணையத்திடம் அளித்தார். அந்த பென்டிரைவில் ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான வீடியோக்கள்  இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இதற்கிடையே கடந்த மாதம் 20-ஆம் தேதி ஜெயலலிதா சிகிச்சை வீடியோ என்று ஒன்றை தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் வெளியிட்டதும், அது உண்மையானதா என்று சர்ச்சை ஏற்பட்டதும் குறிப்பிடத்தக்கது.