யூகங்களுக்கு ஓய்வு – சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து தனது ஓய்வை அறிவித்தார் மகேந்திரசிங் தோனி..!

புதுடெல்லி: சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து தனது ஓய்வை இன்று அறிவித்தார் இந்தியாவின் முன்னாள் கேப்டன் மகேந்திரசிங் தோனி.

இதுகுறித்து கூறப்படுவதாவது; இந்தியாவின் மிகவும் வெற்றிகரமான கேப்டனாக திகழ்ந்தவர் என்ற புகழுக்கு சொந்தக்காரர் மகேந்திரசிங் தோனி.

கடந்த 2007ம் ஆண்டின் டி-20 உலகக்கோப்பை, 2011ம் ஆண்டின் 50 ஓவர் உலகக்கோப்பை மற்றும் 2013ம் ஆண்டின் ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை ஆகிய 3 உலகக்கோப்பைகளை வென்ற ஒரே கேப்டன் என்ற பெருமையைப் பெற்றவர்.

இவர், பல்லாண்டுகள் வெற்றிகரமான டெஸ்ட் கேப்டனாகவும் திகழ்ந்தார். இவர் தலைமையில், இந்திய அணி, டெஸ்ட் கிரிக்கெட்டில் நம்பர் 1 இடத்தைப் பெற்றது.

கடந்த 2015ம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வுபெற்ற தோனி, ஒருநாள் மற்றும் டி-20 போட்டிகளில் தொடர்ந்து பங்கேற்று வந்தார். கடந்த 2019ம் ஆண்டு 50 ஓவர் உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டியில் ஆடியதே இவருக்கான கடைசி சர்வதேச போட்டியாகும்.

இந்நிலையில், கடந்த ஓராண்டுக்கும் மேலாக எந்த சர்வதேச போட்டிகளிலும் பங்கேற்காத நிலையில், இவரின் ஓய்வு எப்போது என்பது குறித்து பல்வேறு யூகங்கள் எழுந்தன.

இந்நிலையில், இன்று இன்ஸ்டாகிராம் வீடியோ மூலமாக, தனது ஓய்வை திடீரென அறிவித்துள்ளார் தோனி. “நன்றி. இவ்வளவு காலமும் நீங்கள் அளித்த ஆதரவுக்கு மிக்க நன்றி. இப்போது முதல் என்னை ஓய்வுபெற்றவனாக கருதவும்” என்றுள்ளார் தோனி.

ஆனால், ஐபிஎல் போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.