அகமதாபாத்: கேப்டன் பொறுப்பேற்ற புதிதில், அந்த உற்சாகத்தில், பந்துவீச்சாளர்களைக் கட்டுப்படுத்தினார் முன்னாள் கேப்டன் மகேந்திரசிங் தோனி என்று பேசியுள்ளார் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் இர்ஃபான் பதான்.

இவர், கடந்த 2007ம் ஆண்டு நடைபெற்ற டி-20 உலகக்கோப்பை மற்றும் 2013ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி கோப்பை ஆகியவற்றில் பங்கேற்ற இந்திய அணியில், தோனியின் தலைமையில் இடம்பெற்றிருந்தார் இர்ஃபான் பதான்.

அவர் கூறியுள்ளதாவது, “2007ம் ஆண்டு கேப்டனாகப் பொறுப்பேற்ற புதிதில், அதிக உற்சாகத்திலிருந்த தோனி, விக்கெட் கீப்பிங் பகுதியிலிருந்து அடிக்கடி ஓடிவந்து பந்துவீச்சாளர்களுக்கு ஆலோசனைகள் வழங்குவார்.

ஆனால், 2013ம் ஆண்டில் சாம்பியன்ஸ் டிராபியில் அவர் தலைமையில் நான் விளையாடியபோது, அவர் அதிக அனுபவம் பெற்றிருந்தார். பந்துவீச்சாளர்களை தாங்களே முடிவு மேற்கொள்ள விட்டுவிட்டார். மித வேகப்பந்து வீச்சாளர்கள் & சுழற்பந்து வீச்சாளர்கள் மீது அதிகளவு நம்பிக்கை வ‍ைத்தார்.

தேவையான நேரங்களில் சுழற்பந்து வீச்சாளர்களை சிறப்பாகப் பயன்படுத்துவார். அவர் தலைமையில், அணிக் கூட்டம் பொதுவாக 5 நிமிடங்கள் மட்டுமே நடைபெறும். அதில் மாற்றமிருக்கவில்லை. காலப்போக்கில் தோனி அமைதியாகிவிட்டார்” என்றுள்ளார் இர்ஃபான் பதான்.