லீட்ஸ்: சுழற்பந்து வீச்சை சமாளிக்கும் வகையிலான ஆலோசனைகளை இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியிடம் பெற்றார் மகேந்திரசிங் தோனி.

ரவிசாஸ்திரி இந்தியாவின் சிறந்த ஆல்ரவுண்டர் மற்றும் சிறந்த சுழற்பந்து நிபுணர். இவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் 151 விக்கெட்டுகளும், ஒருநாள் கிரிக்கெட்டில் 129 விக்கெட்டுகளும் எடுத்துள்ளார்.

இந்நிலையில், இந்த உலகக்கோப்பையில் தொடர்ந்து மந்தமான ஆட்டத்தை வெளிப்படுத்தி கடும் விமர்சனத்தை சந்தித்து வரும் தோனி, சுழற்பந்து வீச்சை எப்படி சமாளிப்பதென சாஸ்திரியிடம் சுமார் 20 நிமிடங்கள் ஆலோசனைப் பெற்றார்.

தோனியின் மோசமான ஆட்டம் குறித்து டெண்டுல்கர் மற்றும் சேவாக் உள்ளிட்டோர்கூட விமர்சனம் செய்திருந்தனர். மேலும், ரோகித் ஷர்மாவும் மறைமுகமாக விமர்சித்திருந்தார்.

குறிப்பாக சுழற்பந்து வீச்சை சமாளிப்பதில் தோனி மிகவும் தடுமாறுவதாக குற்றம் சாட்டப்பட்டது. இந்த தொடரில் இதுவரை 34 ஓவர்கள் ஆடியுள்ள தோனி, 119 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார். 87 சுழற்பந்துகளை எதிர்கொண்டுள்ள தோனி 41 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார். இந்த மோசமான ஃபார்ம்தான் இவரின் மீது கடுமையான விமர்சனங்களைக் கொண்டுவந்துள்ளது.