இவர்களுக்கெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதென்றால் அதற்கு தோனியே காரணம் – சசிதரூரின் புகழ்மாலை..!

திருவனந்தபுரம்: இன்றைய நிலையில், சிறுநகரங்கள் மற்றும் கடைகோடி பகுதிகளிலிருந்து வீரர்கள் வந்திருந்தால், அவர்களுக்கான வாய்ப்பு கதவுகள் தோனியாலேயே திறக்கப்பட்டன என்று தோனியைப் புகழ்ந்துள்ளார் முன்னாள் மத்திய அமைச்சர் சசிதரூர்.

தோனியின் ஓய்வு குறித்து மனம் திறந்துள்ள சசிதரூர் கூறியுள்ளதாவது, “சுதந்திரதினத்தன்று மாலைநேரம், தேசத்தால் மிகவும் நேசிக்கப்பட்ட ஒருவர் அவருக்கே சுதந்திரத்தை அறிவித்துக்கொண்டார். மகேந்திர சிங் தோனி, 39, கேப்டன் கூல், இந்தியா அணியின் எப்போதும் மிகச்சிறந்த விக்கெட்கீப்பர் பேட்ஸ்மேன், ஆகச்சிறந்த, வெற்றிகரமான கேப்டன், சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார்.

அவர், முன்பு டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்றபோதும், ஆஸ்திரேலியாவில் அதை அமைதியான முறையில், பரபரப்பின்றி செய்துமுடித்தார். தற்போது, மொத்தமாக சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறுகையிலும், அவருக்கே உரித்தான ‍அமைதியான பாணியில் செயல்பட்டுள்ளார்.

கடந்த 2005ம் ஆண்டு இலங்கைக்கு எதிரான அவரது ஆட்டத்தைப் பார்த்தது முதல் நான் அவரைப் பின்தொடரும் ரசிகராக உள்ளேன். அப்போட்டியில் அவர் அடித்த 183 ரன்கள் மறக்க முடியாத ஒன்று. தோனியே, உலகில் வெற்றிகரமான கேப்டன். இந்திய கிரிக்கெட் மறுமலர்ச்சிக்கு அவர் தலைமை தாங்கினார்” என்றுள்ளார் சசி தரூர்.