மும்பை :

தோனி பற்றி வெளியில் அதிகம் தெரியாத விஷயம் ஒன்றை இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார்.

இந்திய அணி கிரிக்கெட் போட்டிகளின் இடையே பயணம் மேற்கொள்ளும் போது கேப்டன் என்ற முறையில் தோனி பிசினஸ் கிளாஸில் அமர முடியும் என்றாலும், அவர் எகானமி கிளாசில் தான் பயணம் செய்வாராம். இது குறித்து மேலும் பல தகவல்களை முன்னாள் இந்திய அணி வீரர் சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார்.

தோனி எளிமையானவர் என்பது பலரும் அறிந்த ஒன்றே. சாதாரண மிடில் – கிளாஸ் வீட்டில் பிறந்து, வளர்ந்து, பின் தன் திறமையால் இந்திய அணி கேப்டனாக உயர்ந்தார். இன்று பல நூறு கோடிகளுக்கு அதிபதி என்றாலும் எப்போதும் இயல்பாக, எளிமையாகவே அவர் இருக்கிறார்.

பல முறை தோனி ரசிகர்களை சந்தித்துள்ளார். மைதான ஊழியர்கள், ஹோட்டலில் பணிபுரியும் சாதாரண ஊழியர்கள் ஆகியோருடன் பழகி உள்ளார். இது குறித்தெல்லாம் பல முறை செய்திகள், தகவல்கள் வெளி வந்துள்ளன.

இந்த நிலையில், தான் தோனியின் விமான பயணம் பற்றிய தகவலை கூறி இருக்கிறார் கவாஸ்கர். இந்திய அணி உள்நாட்டில் போட்டிகளில் பங்கேற்றால் தனி விமானத்தில் தான் இரு அணி வீரர்கள் மற்றும் தொலைக்காட்சி ஒளிபரப்பு குழு ஆகியோர் பயணம் செய்வார்கள்.

அந்த விமானத்தில் குறிப்பிட்ட அளவே பிசினஸ் கிளாஸ் இருக்கைகள் இருக்கும். எனவே, அனைத்து வீரர்களும் அதில் அமர முடியாது. கேப்டன்கள், பயிற்சியாளர்கள், நட்சத்திர வீரர்கள் ஆகியோர் மட்டுமே பிசினஸ் கிளாசில் அமர்ந்து பயணம் செய்ய வாய்ப்பு கிடைக்கும்.

அப்போது கேப்டனாக இருந்த தோனி பெரும்பாலும் பிசினஸ் கிளாசில் பயணம் செய்ய மாட்டாராம். தொலைக்காட்சி ஊழியர்கள், கேமராமேன்களுடன் அமர்ந்து எகானமி கிளாசில் தான் பயணம் செய்வாராம். இது குறித்த இந்திய அணி நடைமுறையையும் சுனில் கவாஸ்கர் கூறினார்.

“இந்திய அணியில் உள்நாட்டுப் போட்டிகளில் வீரர்களுக்கு ஒரு அழகான பரிசளிக்கும் நடைமுறை இருந்தது. சர்வதேச போட்டிகள் இந்தியாவில் நடக்கும் போது இரு அணிகளும் ஒரு சிறப்பு தனி விமானத்தில் ஒரு இடத்தில் இருந்து அடுத்த இடத்துக்கு செல்வார்கள்”

“அந்த விமானத்தில் தொலைக்காட்சி குழு, அடுத்த போட்டியின் ஒளிபரப்பிற்காக கேபிள் வயர்களுடன் பயணம் செய்வார்கள். பிசினஸ் கிளாசில் குறைந்த அளவு இடமே இருக்கும். அதில் தான் கேப்டன், பயிற்சியாளர், மேனேஜர் உள்ளிட்டோர் அமர்வார்கள்.”


“முந்தைய போட்டியில் சிறப்பாக ஆடிய இந்திய வீரர்களுக்கு, எகானமி கிளாசிற்கு பதிலாக பிசினஸ் கிளாசில் அமர வாய்ப்பு கிடைக்கும். தோனி கேப்டனாக இருந்த போதும், இந்த விமானங்களில் பிசினஸ் கிளாசில் அமர்வது அபூர்வம். அவர் தொலைக்காட்சி ஒளிபரப்பின் உண்மையான சாம்பியன்களான கேமராமேன், சவுண்ட் இன்ஜினியர்களுடன் பயணம் செய்வார்” இவ்வாறு கவாஸ்கர் குறிப்பிட்டார்.