டில்லி

முன்னாள் இந்திய அணித்தலைவர் தோனிக்கு மாற்றாக ரிஷப் பந்த் ஐ உருவாக்க வேண்டும் என முன்னாள் அணித்தலைவர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

நடந்து முடிந்த உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணியின் முன்னாள்  தலைவர் தோனியின் விளையாட்டை ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வந்தனர்.  அதன் பிறகு அவர் மேற்கிந்திய தீவுகள் தொடரில்  பங்கு பெறாமல் விலகிக் கொண்டார்.   அதன் பிறகு நடந்த இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க டி 20 போட்டிகளிலும் தோனி இடம் பெறவில்லை.  இதனால் தோனி கிரிக்கெட்டில் இருந்து விலகுவார் என கூறப்படுகிறது.

முன்னாள் இந்திய கிரிக்கெட் அணித் தலைவர் சுனில் கவாஸ்கர் நேற்று செய்தியாளரிடம், “இந்திய அணியில் மகேந்திரசிங் தோனியின் காலம் முடிந்துவிட்டது.    ஆகவே தோனிக்கு அடுத்த இடத்தில் யாரைக் கொண்டுவருவது குறித்து நாம் ஆலோசிக்க வேண்டும். அடுத்த ஆண்டு நடக்கும் டி20 உலகக் கோப்பை போட்டிக்கு ரிஷப் பந்தை தயார் செய்ய வேண்டும் என்பது என்னுடைய கருத்து ஆகும்.

தனக்கு கிடைக்கும் வாய்ப்புகளை ரிஷப் பந்த் நன்கு பயன்படுத்திக் கொள்வார் என்று நான் நம்புவதால் அவருக்கே என்னுடைய முன்னுரிமை இருக்கும்.  அது  மட்டுமின்றி அடுத்து நடக்க உள்ள வங்கதேசத்துக்கு எதிரான தொடரில் கூட தோனியைத் தேர்வு செய்யக்கூடாது என்பதும் அவருக்குப் பதிலாக ரிஷப் பந்துக்கு வாய்ப்பளிக்கலாம் என நான் எண்ணுகிறேன்.

ரிஷப் பந்த் தனக்குக் கிடைத்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக்கொள்ளத் தவறினால் அவருக்குப் பதிலாக சஞ்சு சாம்ஸனைத் தேர்வு செய்யலாம்.   ஏனெனில் சஞ்சு சாம்ஸன் சிறந்த விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேன் ஆவார்  வரும் 2020-ம் ஆண்டு நடைபெற  உள்ள டி20 உலகக்கோப்பை போட்டிக்கு இந்திய அணியை இளைஞர்கள்தான் வழிநடத்திச் செல்ல வேண்டும் என்பது என் எண்ணம் ஆகும். ஏற்கனவே தோனி இந்திய அணிக்கு ஏராளமான பங்களிப்புகளைச்  செய்துள்ளார்.

ஆயினும் இப்போது தோனியை சற்று ஒதுக்கிவைத்து அடுத்த வீரரைத் தேர்வு் செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது.  அத்துடன் தோனியை வலுக்கட்டாயமாக அனுப்பாமல் , அவராகவே சென்றுவிடுவார் என்று நினைக்கிறேன்.

வரும் போட்டிகளில் பேட்டிங் வரிசையில் ரிஷப் பந்த் 5 அல்லது 6 வது வரிசையில் களமிறங்குவது சரியானதாக இருக்கும் என நான் நினைக்கிறேன். அதன் மூலம் அவரின் பேட்டிங் இடம் எது என்பது அனைவருக்கும் விரைவில் தெரியவரும். தனது கிரிக்கெட் வாழ்க்கையை டெஸ்ட் போட்டியில் தொடங்கிய ரிஷப் பந்த் சிறப்பாக விளையாடி வருகிறார். நாம் அவரை இன்னும்  பட்டை தீட்ட வேண்டியது அவசியமாகும்.  நாம் அடிக்கடி. அவரின் தவறுகளைச் சுட்டிக்காட்டும் போது அவர் அதைத் திருத்திக்கொள்வார்’’ எனத் தெரிவித்துள்ளார்.