லாகூர்: மகேந்திரசிங் தோனியைப் போன்ற ஒரு புகழ்பெற்ற வீரர், வீட்டில் அமர்ந்துகொண்டு ஓய்வை அறிவித்திருக்கக்கூடாது; மாறாக, மைதானத்தில்தான் ஓய்வை அறிவித்திருக்க வேண்டும் என்று கூறியுள்ளார் பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக்.

அவர் கூறியுள்ளதாவது, “இப்படிப்பட்ட ஆளுமை மிக்க, பலரும் விரும்பும் ஒரு வீரர் வீட்டில் அமர்ந்தபடி ஓய்வு அறிவிப்பது சரியல்ல. களத்தில் அவர் ஓய்வு அறிவித்திருக்க வேண்டும்.

சச்சின் டெண்டுல்கரிடம் ஒருமுறை நான் கூறியதும் இதைத்தான். இவ்வளவு பெரிய ரசிகர்கள் கூட்டம் இருக்கும்போது, மைதானத்தில்தான் ஓய்வுபெற வேண்டும் என்றேன். ஏனெனில் இது உங்கள் மைதானம்; அதுதான் உங்களுக்கு இவ்வளவு பெரிய மரியாதை மற்றும் மாலைகளை வழங்கியுள்ளது.

தோனியும், சச்சின் டெண்டுல்கரைப் போல் மைதானத்தில் ஓய்வு பெற்றிருந்தால், நிச்சயம் அவரின் ரசிகர்கள் மிகப்பெரிய அளவில் மகிழ்ச்சியடைந்திருப்பார்கள்; நானும் கூடத்தான். காரணம், இந்தியாவின் சிறந்த கேப்டன் என்றே நான் அவரை மதிப்பிடுகிறேன்.

தோனி, தனிநபராகவே போட்டிகளை வெற்றி பெற்றுத்தரும் வல்லமையுடையவர். உதாரணம், 2011 உலகக்கோப்பை இறுதிப் போட்டி. அதில், அவர் நான்காம் நிலையில் இறங்கினார் என்றால் அவரது தன்னம்பிக்கை எப்படி இருந்திருக்க வேண்டும்? என்று கூறியுள்ளார் இன்சமாம் உல் ஹக்.