மும்பை:

இலங்கைக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டி மொகாலியில் வரும் 13ம் தேதி நடக்கிறது. இந்த போட்டியுடன் டோனிக்கு ஓய்வு அளிக்கப்படுகிறது. டோனி என்றவுடன் இந்திய அணியின் முன்னாள் கேட்பன் என்று எண்ணிவிட வேண்டாம்.

டோனி என்பது மொகாலி மாவட்ட போலீசில் உள்ள ஒரு மோப்ப நாயின் பெயர். கடந்த 10 ஆண்டுகளாக இது பணியாற்றி வருகிறது. பஞ்சாப் கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெறும் சர்வதேச போட்டிகளின் போது இந்த நாய் பாதுகாப்பு பணிக்கு ஈடுபடுத்தப்பட்டு வந்தது.

‘‘2011ம் ஆண்டு இந்த மைதானத்தில் நடந்த இந்தியா&பாகிஸ்தான் இடையிலான உலக கோப்பை அரை இறுதி போட்டியில் இரு நாட்டு பிரதமர்களும் கலந்து கொண்டனர். அப்போது டோனி தங்களுடன் பணியாற்றியது’’ என்று அதன் பாதுகாவலர் அமரித் சிங் தெரிவித்துள்ளார்.

மேலும், அவர் கூறுகையில், ‘‘தினமும் 6 முதல் 7 மணி நேரம் வரை தூங்கும். பகலிலும் தூங்கும், வெடி பொருட்களை கண்டுபிடிக்கும் திறன் வாய்ந்தது. எந்த சோதனை பணிக்கு சென்றாலும் டோனி விரைந்து செயல்படக் கூடியதாகும். இது எங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய சொத்து.

அதன் பிரிவு எங்களுக்கு பெரிய இழப்பாகும். லேப்ரடார் இனத்தை சேர்ந்த வெள்ளை நிற நாய் இந்த ஓய்வுக்கு பின்னர் ஏலம் விடப்படுகிறது. இதை தத்தெடுக்க அடிப்படை தொகை ரூ. 800 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. டோனி மட்டுமின்றி இதோடு பணியாற்றிய ஜான், பிரீத்த ஆகிய 2 நாய்களுக்கும் ஓய்வு அளிக்கப்படுகிறது’’ என்றார்.