புதுடெல்லி: கங்குலி சிரமப்பட்டு கட்டமைத்து வைத்திருந்த சிறந்த அணியைப் பெற்றதால்தான், தோனியால் வெற்றிகரமான கேப்டனாக பரிணமிக்க முடிந்தது என்றுள்ளார் முன்னாள் இந்திய பேட்ஸ்மேன் கவுதம் கம்பீர்.
அவர் கூறியுள்ளதாவது, “டெஸ்ட் கிரிக்கெட்டைப் பொறுத்தவரை, வெற்றிகரமான கேப்டனாகி மகேந்திர சிங் தோனி திகழ காரணமே ஜாகிர்கான்தான். அந்த ஆசிர்வாதத்தை தோனி பெற்றதற்கு காரணமே கங்குலிதான். என்னைப் பொறுத்தவரை, உலகின் சிறந்த பந்துவீச்சாளராக ஜாகீர் கான் திகழ்ந்தார்.
கிரிக்கெட்டின் அனைத்து வடிவங்களிலும், ஒரு சிறந்த அணி தோனிக்கு கிடைப்பதற்கு கஞ்குலிதான் காரணம். கடந்த 2011ம் ஆண்டு உலகக்கோப்பையில் சிறந்த அணியை தோனி பெற்றதன் பின்னால் கங்குலியின் உழைப்பு இருந்துள்ளது. அந்த உழைப்பின் பலனை தோனி அனுபவித்தார்” என்றுள்ளார் கம்பீர்.
கடந்த 2007ம் ஆண்டு டி-20 உலகக்கோப்பை வென்ற இந்திய அணி மற்றும் 2011ம் ஆண்டு 50 ஓவர் உலகக்கோப்பை வென்ற இந்திய அணி ஆகியவற்றில் இடம்பெற்றிருந்தார் கவுதம் கம்பீர்.