கொல்கத்தா: மகேந்திரசிங் தோனி ஒரு அருமையான வீரர் என்றும், அவரின் சிக்சர் அடிக்கும் திறன் அபூர்வமானது என்றும் பாராட்டியுள்ளார் பிசிசிஐ தலைவர் செளரவ் கங்குலி.

தோனி போன்ற ஒரு வெற்றி கேப்டனை, பிசிசிஐ அமைப்பு மரியாதையாக நடத்தவில்லை என்ற குற்றச்சாட்டு பரவலாக எழுந்துவரும் நிலையில், ஓய்வை அறிவித்து 1 வாரம் கடந்த நிலையில் கருத்து தெரிவித்துள்ளார் கங்குலி.

அவர் கூறியுள்ளதாவது, “பாகிஸ்தானுக்கு எதிரான விசாகப்பட்டணம் போட்டியில், மூன்றாவது இடத்தில் களமிறங்க, தோனிக்கு வாய்ப்பளிக்கப்பட்டது. அப்போட்டியில் அசத்தினார். அதிகநேரம் பேட்டிங் செய்வதற்கு கிடைத்த வாய்ப்புகளையெல்லாம் சிறப்பாக பயன்படுத்தினார்.

சச்சினுக்குக்கூட, பின்வரிசையிலேயே தொடர்ந்து வாய்ப்புகள் கிடைத்திருந்தால் அவரால் இந்தளவு சாதித்திருக்க முடியாது. தோனியைப் பொறுத்தவரை, பல திறமைகள் கொண்டவர், அவரின் சிக்சர் அடிக்கும் திறமை அபாரமானது & அபூர்வமானது. நான் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்ற பிறகும்கூட, தோனி முன்வரிசையில் களமிறங்க வேண்டுமென்ற கருத்தை தெரிவித்தேன்” என்றார் கங்குலி.