இதுவரை 757 கொரோனா நோயாளிகளுக்கு இலவசமாக டயாலிசிஸ்

சென்னை:
சென்னை அரசு மருத்துவமனைகளில் இதுவரை 757 கொரோனா நோயாளிகளுக்கு இலவசமாக டயாலிசிஸ் செய்யப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றுநோய் சுகாதாரத்துறைக்கு பல சவால்களை கொண்டுவந்துள்ளது, அதில் ஒன்று சிறுநீரகப் பிரச்சினை உள்ள ஒரு நோயாளிக்கு டயாலிசிஸ் செய்வதாகும், சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகள் மார்ச் மாதம் முதல் மொத்தம் 757 கொரோனா நோயாளிகளுக்கு இலவசமாக டயலிஸிஸ் செய்துள்ளனர்.

அக்டோபர் 30-ஆம் தேதி வரை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில், 555 பேருக்கு இலவசமாக டயலிஸிஸ் செய்யப்பட்டுள்ளது, ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 125 பேருக்கும், கீழ்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 77 டயாலிசிஸ் செய்யப்பட்டுள்ளது.

மேலும் சென்னை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களிலிருந்து பல நோயாளிகள் டயாலிசிஸ் செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

இதைப்பற்றி ஸ்டான்லி அரசு மருத்துவமனை, நெஃபரோலஜி துறையின் தலைமை மருத்துவரான டாக்டர் எம் எட்வின் பெர்னான்டோ தெரிவித்துள்ளதாவது: கொரோனா நோயாளிக்கு டயலிஸிஸ் செய்வதில் பல சவால்கள் இருக்கின்றன, இந்த நோயாளிகளை கொரோனா அல்லாத நோயாளிகளுடன் இணைத்து டயாலிசிஸ் செய்ய முடியாது, ஏனெனில் நோய் தொற்று ஏற்படுவதற்கான அதிக வாய்ப்புள்ளது, ஆகவே கொரோனா நோயாளிகளுக்கு என்று தனியாக டயாலிசிஸ் பிரிவை அமைத்துள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் ஏற்கனவே சிறுநீரக பிரச்சினை இருந்த நோயாளிகளின் நிலைமையை கொரோனா இன்னும் மோசமாகியுள்ளது, சாதாரண சிறுநீரக பிரச்சனை உள்ளவர்கள் கூட தொற்றுநோய்க்கு பிறகு கடுமையான சிறுநீரக சவால்களை சந்திக்க வேண்டியுள்ளது.

ஸ்டான்லி மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு என ஐந்து பிரத்தியேக ஹீமோடயாலிசிஸ் வசதிகள் உள்ளன. மேலும் கொரோனா நோயாளிகள் ஏற்கனவே உணர்ச்சிவசப்பட்டு கவலையில் இருக்கும் நிலையில், டயாலிசிஸ் செய்யும் போது அவர்கள் மனதளவில் பலவீனம் அடைகிறார்கள், இது அவர்களின் உடல்நிலையை மேலும் மோசமடையச் செய்யும், அதனால் நாங்கள் அதையும் நிவர்த்தி செய்ய சிறப்பு கவனம் செலுத்தினோம் என்று மருத்துவர் எட்வின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.