ஐநூறு ரூபாய்க்கு ஆதார் தகவல்கள் விற்பனையா?: ஆதார் ஆணையம் மறுப்பு

டில்லி:  

ஐநூறு ரூபாய்க்கு ஆதார் விவரங்கள் கிடைப்பதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வந்தது. இதுகுறித்து வட மாநில ஊடகங்களில் செய்தி வெளியானது. இது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இந்நிலையில், அந்த தகவல் தவறு என்று இந்திய ஆதார் அணையம்  (யூஐடிஏஐ) மறுத்துள்ளது.

ஆதார் விவரங்களை தெரிந்துக் கொள்ள ரூ. 500 விலையில் மென்பொருள் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்த செய்தியை வெளியிட்ட அந்நிறுவனம், இதை உண்மையா என பரிசீலித்ததாகவும், அப்போது, பெயர் வெளியிடாத நிறுவனம் ஒன்று ரூ.500க்கு  ஆதார் தகவல்களை தெரிந்துகொள்ளும் வசதியுள்ள மென்பொருளை விற்பனை செய்துவருவதாகவும் கூறியது. அதுமட்டுமின்றி,  மேலும் ரூ.300 செலுத்தினால் ஆதார் எண்ணை தெரிவித்தால் அந்த ஆதார் அட்டையை அச்சடிக்கும் வசதி கொண்ட மென்பொருளையும் இந்த நிறுவனம் செய்திக் குழுவுக்கு அளித்தது என்று செய்தி வெளியிட்டிருந்தது.

இந்த தகவல்கள் வைரலாக சமூக வலைதளங்களில் பரவியது.  இதுகுறித்து ஆதார் தகவல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.

இதுகுறித்து ஆதார் தகவல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது,

“ஆதார் விவரங்கள் கசிவதற்கு வாய்ப்பில்லை. அவை மிகவும்  பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. அந்த தகவல்களை யாரும் திருட முடியாது.  பொதுமக்களின் ஆதார் விவரங்களைத் திருத்த, அதற்காக  நியமிக்கப்பட்டுள்ள சிறப்பு அதிகாரிகளுக்கும், மாநில அரசு அதிகாரிகளுக்கும் மட்டுமே அனுமதி  வழங்கப்பட்டுள்ளது.

மேலும்,  இந்த அதிகாரிகளாலும்,  ஆதார் வைத்திருப்பவரின் விழி, விரல் ரேகைப் பதிவு உள்ளிட்ட சில விவரங்களை  பார்க்க முடியாது.

இதுபோன்ற கடுமையான பாதுகாப்பு சூழலில் வைக்கப்பட்டுள்ள  ஆதார் விவரங்களை  திருட முயற்சித்தாலோ, முறைகேடுகளில் யாரேனும் ஈடுபட முயன்றாலோ  அவர்களைக் கண்டறிந்து, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.”

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.