ரஃபேல் ஊழலை மறைக்க சிபிஐயில் மாற்றமா? கெஜ்ரிவால் டிவிட்

டில்லி:

நாடு முழுவதும் பரபரப்பு ஏற்படுத்தி வந்த ரஃபேர் விமான ஊழலை மறைக்க சிபிஐ அதிகாரிகள் மாற்றம் நடைபெறுகிறதா என்று டில்லி முதல்வரும், ஆம்ஆத்மி தலைவருமான அரவிந்த் கெஜ்ரி வால் கேள்வி எழுப்பி உள்ளார்.

சிபிஐ இயக்குனர் அலோக் வர்மாவிற்கும், சிறப்பு இயக்குனரான ராகேஷ் அஷ்தானாவிற்கும் இடைய 2 கோடி லஞ்சப்பணம் தொடர்பான புகாரின் பேரில் பனிப்போர் நடைபெற்று வந்தது. இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்ததை தொடர்ந்து, சிபிஐக்குள்ளேயே அதிரடி நடவடிக்கைகள் பாய்ந்தன.

இதைத்தொடர்ந்து,  இயக்குனர்கள் இருவரையும் விடுமுறை எடுத்துக்கொண்டு ஒதுங்கும்படி மத்திய அரசு உத்தரவிட்டது. மேலும் பலரை அதிரடியாக மாற்றியும் உள்ளது.

உடனே சிபிஐக்கு  இடைக்கால இயக்குனராக நாகேஸ்வரராவ் என்ற அதிகாரியை நியமித்து உள்ளது. வர் உடனடியாக இன்று அதிகாலை 2 மணிக்கு சிபிஐயின் இயக்குனராக பொறுப்பேற்றார்.

இந்த விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில்,  சிபிஐல் நடைபெற்ற அவசர மாற்றத்திற்கும் ரஃபேல் விவகாரத்திற்கும் தொடர்புள்ளதா? எனக் கேள்வி எழுப்பி டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் டிவிட்டரில் பதிவிட்டு  உள்ளார்.

இதுகுறித்து அவர் பதிவு செய்துள்ள டிவிட்டில்,  ரஃபேல் விவகாரத்திற்கும் அலோக் வர்மா நீக்கப்பட்டதற்கும் தொடர்பு உள்ளதா?, ரஃபேல் விவகாரத்தில் அலோக் வர்மா விசாரணையை தொடங்கவிருந்தது, பிரதமர் மோடிக்கு பிரச்சனையா? எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.