மும்பை: தான் நடத்தும் நிறுவனங்கள் குறித்த விபரம் மற்றும் அதன் வருமான கணக்குகளை கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற மராட்டிய சட்டசபை தேர்தலில் தாக்கல் செய்த அஃபிடிவிட்டில் மறைத்தார் என்ற குற்றச்சாட்டால், அம்மாநில பா.ஜ. தலைவர் சந்திரகாந்த் பட்டீல் நெருக்கடியில் சிக்கியுள்ளார்.

புனேவில் வசிக்கும் ஒருவர் இந்த மோசடி தொடர்பாக தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதித்துறை நடுவர் மன்றம், இந்த விஷயத்தை காவல்துறை விசாரித்து செப்டம்பர் 16ம் தேதிக்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டுமென்று உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2019ம் ஆண்டு மராட்டிய சட்டசபை தேர்தலில், கோத்ருட் தொகுதியில் போட்டியிட்டு வென்றார் சந்திரகாந்த். ஆனால், அதன்பொருட்டு தாக்கல் செய்த மனுவில் இவர் விபரங்களை மறைத்துவிட்டதாக தற்போது குற்றம் சாட்டப்படுகிறது.

ஆனால், தனக்கெதிராக பெரிய அரசியல் சதி நடக்கிறது என்று கூறியுள்ள சந்திரகாந்த், கடந்தாண்டே முடிந்துவிட்ட ஒரு தேர்தல் குறித்து இப்போது கிளற வேண்டிய அவசியமென்ன? என்றும் கேட்டுள்ளார். குற்றச்சாட்டில் உண்மையென்றால், இப்பிரச்சினையை அப்போதே எழுப்பியிருக்க வேண்டுமென்றும் அவர் கூறியுள்ளார்.