டில்லி:

ந்திய விமானப்படைக்குச் சொந்தமான  சுகோய்-30 விமானத்தை சீனா சுட்டு வீழ்த்தியதா என்ற சந்தேகத்தை ராணுவ வல்லுநர்கள் வட்டாரம் எழுப்பியுள்ளது.

கடந்த சில நாள்களுக்கு முன் இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அசாமின் தேஜ்பூர் அருகே பயிற்சியில் ஈடுபட்டிருந்தது சுகாய் 30 ரக விமானம். இதில் இரு விமானிகள் இருந்தனர்.

அப்போது, திடீரென ரேடார் சிக்னலிலிருந்து விமானம் விலகிவிட்டது. விமானத்துக்கு என்ன ஆனது என்று தெரியாமல் விமானப்படை அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.  இதையடுத்து, விமானத்தைத் தேடும் பணி தீவிரமாக நடந்து வந்தது.
இந்த நிலையில், காணாமல் போன சுகோய் 30  விமானத்தின் பாகங்கள்  கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.  அசாம் மாநிலத்தில் சீனா எல்லை அருகே,  பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அதே நேரம்,  இரண்டு விமானிகளின் நிலைகுறித்து தெரியவில்லை.

இந்தியா  – சீனா இடையேயான மக்மாகன் எல்லைக்கோடு குறித்து தொடர்ந்து இரு நாடுகளுக்கிடையே பிரச்சினை இருந்து வருகிறது. இந்த எல்லை பிரச்சினை காரணமாக கடந்த 1962ம் ஆண்டு இந்தியா மீது சீனா போர் தொடுத்ததும் வரலாறு.

இப்படி இந்தியா மீது தொடர்ந்து வெறுப்பை வெளியிட்டுவரும் சீனா, சமீபகாலமாக அதீத வெறுப்பை உமிழ்ந்த வருகிறது.

கடந்த ஏப்ரல் மாதம், தலாய் லாமா அருணாசல பிரதேச மாநிலத்துக்கு வருகை புரிந்தார். இதை சீனா கடுமையாக எதிர்த்தது. தலாய் லாமாவின் அருணாசல பிரதேச விஜயத்தால் “எதிர்மறையான விளைவுகள்”  ஏற்படும் என்று இந்தியாவை சீனா மிரட்டியது.

ஆனால் தனது எல்லைக்குட்பட்ட பகுதிக்குள் தலாய் லாமாவை அனுமதிப்பது தனது விருப்பம் மற்றும் உரிமை என்று இந்தியா பதிலடி கொடுத்தது.

இந்த நிலையில் இந்தியாவுக்குச் சொந்தமான அருணாசல பிரதேசத்தை, “தெற்கு திபேத்” என்று அழைத்து சொந்தம் கொண்டாடும் சீனா, அங்கு ஆறு ஊர்களின் பெயர்கள் மாற்றப்படுவதாக அறிவித்து, இந்தியாவை ஆத்திரம் கொள்ளச் செய்தது.

இந்த நிலையில், சீன எல்லை அருகில் இந்திய போர்ப்படை விமானம் சிதறி விழுந்துள்ளது.

ஆகவே, “இந்த போர் விமானத்தை சீன ராணுவம் சுட்டு வீழ்த்தியிருக்குமோ”  என்ற சந்தேகத்தை ராணுவ வல்லுநர்கள் வட்டாரங்கள் வெளிப்படுத்தி உள்ளன.

அதே நேரம், இந்திய ராணுவம், விமானம் விழுந்தற்கான காரணங்களை ஆராய்ந்து வருவதாக தெரிவித்துள்ளது.