டில்லி

பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது சுமார் 1.16 லட்சம் கோடி மதிப்பிலான கள்ள நோட்டுக்கள் மாற்றப்பட்டிருக்கலாம் என நேஷனல் ஹெரால்ட் ஊடகம் தெரிவித்துள்ளது.

கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 8 ஆம் தேதி பிரதமர் மோடி உயர் மதிப்புள்ள ரு.500 மற்றும் ரூ.1000 நோட்டுக்கள் செல்லாது என அறிவித்தார். இதற்கு முக்கிய காரணம் கருப்புப் பண ஒழிப்பு என மத்திய அரசு தெரிவித்தது. அது மட்டுமின்றி கள்ள நோட்டுப் புழக்கம் உள்ளதாகவும் அதை தடுக்கவே இந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கை என பிரதமர் கூறினார்.

இது குறித்து செய்தி ஊடகமான நேஷனல் ஹெரால்ட் ஒரு புதிய செய்தியை வெளியிட்டுள்ளது.

அந்த செய்தியில், “பணமதிப்பிழப்பு நடவடிக்கை நடந்த போது மோடி அரசு கள்ள நோட்டுக்களை மாற்ற அனுமதித்துள்ளதா ? ரிசர்வ் வங்கியின் அறிக்கைகளை பார்க்கும் போது அவ்வாறு நினைக்க தோன்றுகிறது.

உதாரணமாக ரிசர்வ் வங்கி 10 நோட்டுக்களை அச்சடித்தது என வைத்துக் கொள்வோம். பணமதிப்பிழப்பின் போது வங்கியில் 15 நோட்டுக்கள் மாற்றப்பட்டுள்ளன. அப்போது அதிகம் உள்ளவை கள்ள நோட்டுக்கள் ஆகும்.

ரிசர்வ் வங்கியின் ஆண்டு அறிக்கையின்படி ரூ.14.41 லட்சம் கோடிகள் மதிப்பில் ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுக்கள் அச்சடிக்கபட்டிருந்தன. ஆனால் பணமதிப்பிழப்புக்கு பிறகு வங்கிகளில் 15.28 லட்சம் கோடி மதிப்புள்ள நோட்டுக்கள் மாற்றப்பட்டுள்ளன. அதாவது அச்சடித்ததை விட ரூ. 1.16 லட்சம் கோடி அதிக மதிப்பில் நோட்டுக்கள் மாற்றப்பட்டுள்ளன.

நிதி அமைச்சகம் பணமதிப்பிழப்பு அறிவிக்கப்பட்ட போது ரூ. 15.44 லட்சம் கோடி மதிப்புள்ள நோட்டுக்கள் புழக்கத்தில் இருந்ததாகவும் அதில் ரூ.15.28 லட்சம் கோடி மதிப்பிலான நோட்டுக்கள் வங்கிகள் மூலம் திரும்பி வந்து விட்டதாகவும் தெரிவித்தது. அதாவது அரசு கூறியபடி புழக்கத்தில் இருந்த நோட்டுக்களில் 99%க்கு மேல் திரும்பி வந்துள்ளது.  ரிசர்வ் வங்கியின் தகவலுக்கும் நிதி அமைச்சகத்தின் தகவலுக்கும் வேறுபாடு உள்ளது.

அது மட்டுமின்றி ரிசர்வ் வங்கி ஆண்டு அறிக்கை மற்றும் தகவல் அறியும் சட்டத்தின் கிழ் பெறப்பட்ட தகவல்களின் படி கடந்த 2000 ஆம் ஆண்டு முதல் 2018 வரை 1040 கோடி ரூ.1000 நோட்டுக்கள் அச்சடிக்கப்பட்டுள்ளன. அதே கால கட்டத்தில் 1122 கோடி பழைய மற்றும் பழுதடைந்த நோட்டுக்கள் அழிக்கப்பட்டுள்ளன. இதிலும் வித்தியாசமுள்ளது.   இதனால் இதில் பெரிய முறைகேடு உள்ளதாக தோன்றுகிறது.

ரிசர்வ் வங்கியிடம் புழக்கத்தில் உள்ள மற்றும் அச்சடிக்கப்பட்ட நோட்டுக்களின் எண்ணிக்கையில் குழறுபடிகள் உள்ள தகவல்கள் இருக்கும் போது பணமதிப்பிழப்பு நடவடிக்கை ஏன் மேற்கொள்ளப்பட்டது? கள்ளநோட்டுக்களை மாற்ற மோடி அரசு அனுமதி அளித்ததா?   ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் திடீரென ராஜினாமா செய்தது ஏன்?” என கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.