ஜல்லிக்கட்டு நாயகன், மாடு பிடித்தாரா? துரை முருகன் கேள்வியால் சட்டமன்றத்தில் சிரிப்பலை…

சென்னை:

மிழக சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்றைய கேள்வி நேரத்தின்போது,  ஜல்லிக்கட்டு நாயகன் என்று அழைக்கப்படும் துணைமுதல்வர் ஓபிஎஸ் மாடு பிடித்தாரா? என கேள்வி எழுப்பினார். இதனால் சட்டமன்றத்தில் சிரிப்பலை எழுந்தது.

பட்ஜெட் கூட்டத்தொடரின் 3வது நாள் கூட்டம் இன்று நடைபெற்று வரகிறது. பட்ஜெட் விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய அதிமுக உறுப்பினர், ஜல்லிக்கட்டு நாயகன் ஓ. பன்னீர்செல்வம் என்று அவரை புகழ்ந்து பேசினார்.

அப்போது குறுக்கிட்ட, திமுக எம்எல்ஏ துரைமுருகன், துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஜல்லிக்கட்டுப் போட்டியில் பங்கேற்று மாடு பிடித்தாரா? என்று நக்கலாக கேள்வி எழுப்பியவர், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியில் ஓபிஎஸ் பங்குகொண்டு  மாடுபிடித்தால் எம்எல்ஏக்கள் அனைவரும் பார்க்க ஆவலாக இருக்கிறோம் என்று கூறினார்.

துரைமுருகனின் நக்கல் பேச்சால் அவையில் சிரிப்பலை எழுந்தது.  இதற்கு பதில் அளித்து பேசிய, சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், ஜல்லிக்கட்டு நடத்த சட்டம் இயற்றியதால் ஓ. பன்னீர்செல்வத்தை ஜல்லிக்கட்டு நாயகன் என்று அதிமுகவினர் அழைப்பதாக கூறினார்.

மேலும், புதுக்கோட்டை ஜல்லிக்கட்டில் மாடுபிடிக்க துரைமுருகன் வந்தால் தேவையான ஏற்பாடுகளை செய்து தருவதாகவும் விஜயபாஸ்கர் பதில் கூறினார்.