சிறுமி பலாத்கார கொலையை ஆதரித்த தனியார் நிறுவன நிர்வாகி பணி நீக்கம்?

திருவனந்தபுரம்:

காஷ்மீர் மாநிலத்தில் 8 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டார். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதோடு இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்களுக்கு ஒரு கும்பல் ஆதரவு தெரிவித்து வருகிறது.

இந்த வகையில் கேரளாவை சேர்ந்த விஷ்ணு நந்தகுமார் என்பவர் ஒரு கருத்தை தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதில்,‘‘ அந்த சிறுமி இப்போதே கொல்லப்பட்டது நல்லது. இல்லை என்றால் எதிர்காலத்தில் அந்த சிறுமி தற்கொலை படையாக மாறியிருப்பார்’’ என்று தெரிவித்திருந்தார்.

இவர் கோடாக் மகிந்திரா நிறுவன உதவி மேலாளராக பணியாற்றி வந்தார். இந்த கருத்துக்கு சமூக வலை தளத்தில் கடும் கண்டனம் எழுந்தது. நந்தகுமாரை பணிநீக்கம் செய்ய வேண்டும் என்று கோடாக் மகிந்திராவின் பேஸ்புக் பக்கத்தில் எதிர்ப்புகள் குவிந்தன. அதோடு பேஸ்புக் தர நிர்ணயத்தில் கோடாக் மகிந்திராவின் நிலையையும் குறைத்தனர்.

கடைசியாக அந்த நிறுவனம் கடந்த நேற்று (12ம் தேதி) டெபிட் கார்டு தொடர்பாக ஒரு பதிவு வெளியிட்டிருந்தது. இதில் 34 ஆயிரம் கமென்ட்கள் பதிவாகியிருந்தது. இதில் பெரும்பாலானவர்கள் நந்தகுமார் பணி நீக்கத்தை வலியுறுத்தியிருந்தனர்.

இது குறித்து கோடாக் மகிந்திரா நிறுவனம் சார்பில் ஒரு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில் சரியான செயல்பாடு இல்லாத காரணத்தால் ஏப்ரல் 11ம் தேதி விஷ்ணு நந்தகுமார் பணி நீக்கம் செய்யப்பட்டுவிட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது அந்த கருத்தை வெளியிட்ட 12ம் தேதிக்கு முன்னரே அவர் பணி நீக்கம் செய்யப்பட்டுவிட்டார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.