ராஜினாமா செய்த மலேசியப் பிரதமர் சத்தியத்தை மீறினாரா? : புதிய தகவல்கள்

கோலாலம்பூர்

லேசியப் பிரதமர் மகாதீர் முகமது ராஜினாமாவைத் தொடர்ந்து மேலும் பல தகவல்கள் வெளியாகி உள்ளன.

கடந்த 1981 முதல் 2003 வரை மலேசியப் பிரதமராகப் பதவி வகித்து வந்த மகாதீர் முகமது மிண்டும் 2018ல் பிரதமராகப் பதவி ஏற்றார்.   அப்போதைய ஆளும் கட்சியின் ஊழல்களால் வெறுப்படைந்திருந்த மக்கள் மகாதீர் முகமது கூட்டணிக்குப் பெரும்பான்மை அளித்தனர். மகாதீர் முகமதுவின் யுனைடட் இண்டிஜினியஸ் கட்சியுடன் அன்வர் இப்ரகீமின் பீப்பிள் ஜஸ்டிஸ் கட்சி அப்போது கூட்டணி வைத்து ஆட்சியை பிடித்தது.

சுமார் 94 வயதான மகாதீர் உலகின் மிகவும் வயதான  பிரதமர் என்னும்  புகழை அடைந்தார்.    அவர் பதவி ஏற்றதும் மக்கள் மட்டுமின்றி அவருடைய கூட்டணி கட்சியினரும் அவருக்குப் புகழ் மாலை சூட்டினர்.   சமீப காலமாக இந்த கூட்டணிக்குள் கடும் சர்ச்சைகள் எழுந்தன.   கூட்டணிக் கட்சித் தலைவரான அன்வரை மகாதீர் முகமது கடுமையாக விமர்சிக்க அவரும் இவரைக் கடுமையாக விமர்சித்தார்.

இதையொட்டி முன்னாள் ஆளும் கட்சியினருடன் அன்வர் கட்சியினர் ஆலோசனை செய்ததாக தகவல்கள் வெளியாகின.

அன்வர் இப்ரகீம்

நேற்று செய்தியாளர்களை சந்தித்த அன்வர் இப்ரகீம் செய்தியாளர்களிடம் “மகாதீர் முகமது எங்களை ஏமாற்றி விட்டார்.  அவர் ஆட்சிக்கு வந்து சில வருடங்களில் எனக்குப் பொறுப்பு அளிப்பதாக சத்தியம் செய்திருந்தார்.  ஆனால் தற்போது அவர் சத்தியத்தை மீறி விட்டர்/அது மட்டுமின்றி எனது கட்சியைச் சேர்ந்த சிலரும் என்னை ஏமாற்றி உள்ளனர்” எனத் தெரிவித்தார்.

இந்த பரபரப்பு அடங்குவதற்குள் இன்று மகாதீர் முகமது ராஜினாமா செய்துள்ளார்.  ஏற்கனவே தமக்கு அளித்துள்ள சத்தியத்தை மகாதீர் மீறியதாக அன்வர் புகார் கூறிய நிலையில் மகாதீர் ராஜினாமா செய்தது பரபரப்பை அதிகரித்துள்ளது.   தற்போது அன்வர் பிரதம்ர் ஆவாரா அல்லது மீண்டும் தேர்தல் நடக்குமா எனக் கேள்வி எழுந்துள்ளது.  அதே வேளையில் மகாதீர் முகமது எதிர்க்கட்சியினருடன் இணைந்து மீண்டும் பிரதமராக பதவி ஏற்பார் எனவும் சொல்லப்படுகிறது.