வேட்புமனு தாக்கலில் பிரதமர் மோடி சொத்து விவரத்தை மறைத்தாரா? : உச்ச நீதிமன்றத்தில் பொது நல வழக்கு

புதுடெல்லி:

வேட்புமனு தாக்கல் செய்யும்போது சொத்து விவரத்தை தெரிவிக்காமல் பிரதமர் மோடி மறைத்ததாக, உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது.


முன்னாள் பத்திரிக்கையாளரும் தற்போது மார்க்கெட்டிங் ஆலோசகருமான சகேட் கோகலே தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:

கடந்த 2007-ம் ஆண்டு தேர்தலில் போட்டியிடும்போது, தாக்கல் செய்த வேட்புமனுவில் மோடி சொத்து விவரத்தை தெரிவித்திருந்தார்.

அதில், குஜராத் காந்திநகரில் பிளாட் இருப்பதாக குறிப்பிட்டிருந்தார். அதன்பின்னர், 2012 மற்றும் 2014 தேர்தல்களில் இந்த சொத்து விவரம் தெரிவிக்கப்படவில்லை.

ஆனால், அவர் பெயரிலேயே அந்த பிளாட் இருப்பது ஆவணங்களின் மூலம் தெரியவந்துள்ளது.
அதேசமயம், 2006-ம் ஆண்டு நிதி அமைச்சர் வேட்புமனுதாக்கலின் போது காட்டிய சொத்து விவரத்திலும் அதே பிளாட் காட்டப்பட்டுள்ளது. அது மோடி உட்பட 4 பேரது பங்கு என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் அந்த நிலம் மோடி குஜராத் முதல்வரானதும் அரசு சார்பில் ஒதுக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் ஒதுக்கீட்டில் இந்த நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், 2000-ம் ஆண்டுக்குப் பிறகு யாருக்கும் அரசு நிலம் ஒதுக்கப்படவில்லை என்று குஜராத் அரசு தரப்பில் கூறப்பட்டது.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.