பென்டகன் – அமெரிக்க பாதுகாப்புத் துறையின் தலைமையகம். இது அமெரிக்க ஜனாதிபதிக்கே ஆலோசனை அளிக்கும். சில சமயங்களில் ஜனாதிபதிக்கும் கட்டுபடாத அதிகாரங்களைக் கொண்டது. கொரோனா எனும் கண்ணுக்கு தெரியாத எதிரிக்கு அமெரிக்கா உட்பட உலகமே நடுநடுங்கி போயிருக்கும் இச்சமயத்தில், அதே கொரோனாவால், பெண்டகனில் ஒரு பெரும் இடி இறங்கியுள்ளது.

ஆம்! இந்த கட்டுரை எழுதப்படும் வரை, உலகின் 200 நாடுகளில் பரவி, 4.12 இலட்சம் பேரை பாதித்து, 81 ஆயிரம் பேரை பலிக் கொண்டிருக்கும் இந்த வைரஸ் தாக்குதல் பற்றி பெண்டகனுக்கு 2017 ஆம் ஆண்டே தெரியும் என்பதே அது. அமெரிக்காவில் மட்டுமே பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 4 இலட்சம் பேர் மற்றும் உயிர் பலி 12 ஆயிரம் பேர் என்பதால் இந்த செய்தி அமெரிக்க அரசை அதிர வைக்கக் கூடியதாக இருக்கிறது. மேலும் வைரஸ் தாக்குதல் பற்றி மட்டுமின்றி, இந்த தாக்குதல் கட்டுப்படுத்தப்பட இயலாமல் போகுமானால், ஏற்படக் கூடிய சேதங்கள், முகக் கவசம், மருத்துவமனை படுக்கைகள் மற்றும் வென்டிலேட்டர்களின் பற்றாக்குறைகளை திடுக்கிடும் வகையில் துல்லியமாக பல ஆண்டுகளுக்கு முன்னரே, பென்டகனால் கணிக்கப்பட்டு 100 பக்கங்களுக்கு ஒரு விரிவான அறிக்கை தயார் செய்யப்பட்டது” என்று அமெரிக்காவில் வெளிவரும் “தி நேஷன்” பத்திரிக்கையின் கென் கிளிபென்ஸ்டைன் ஒரு கட்டுரையை ஏப்ரல் 1 அன்று எழுதியுள்ளார்.

முந்தைய உலகளாவிய இன்ஃப்ளுயன்சா காய்ச்சல் பரவலுக்கு எதிராக, அமெரிக்க பாதுகாப்பு துறையின் பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் புதுபிக்கப்பட்ட திட்டங்கள் என்று பெயரிப்பட்ட இந்த 103 பக்க ஆவணம், எதிர்காலத்தில் வைரஸ் போன்ற தொற்றுக் கிருமி அல்லது கிருமிகளால் வெளியிடப்படும் விசத் தன்மைவாய்ந்த இரசாயனத்தினால் படு தீவிரமான சுவாசக் குறைபாடு நோயை உண்டாகக் கூடிய ஒரு தொற்று நோய் ஏற்படலாம் என்றும், அது இந்த உலகின் ஒரு குறிப்பிடத்தக்க வகையில் மனிதக் குலத்திற்கே அச்சுறுத்தலாக இருக்கலாம் என்றும் விவரிக்கிறது.

அது மட்டுமின்றி, அந்த தொற்று நோய் பரவுவதை கட்டுப்படுத்த தவறும் பட்சத்தில், பாதுகாப்பு முகக் கவசங்கள் மற்றும் வென்டிலேட்டர்களின் பற்றாக்குறை, உலகளாவிய தொழிலாளர்கள் பற்றாக்குறை மற்றும் தொழிலாளர்களின் இருப்பு போன்றவற்றிலும் ஒரு குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும்” என்றும் அந்த ஆவணம் எச்சரிக்கிறது.

“அமெரிக்க உளவுத்துறை மற்றும் இராணுவத் தலைமையகம் நடக்கவிருப்பதை நன்றாக அறிந்திருந்தன என்றும், துரதிஷ்டவசமாக என்ன நடந்ததுக் கொண்டுள்ளது?” என்று நேஷன் பத்திரிக்கையின் நிருபர் கென் கிளிபென்ஸ்டைன் தன் பேட்டியில் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆவணம் எவ்வாறு கிடைத்தது என்று கூறும்போது, “பெயர் குறிப்பிடாத ஒரு பென்டகன் அதிகாரி இந்த ஆவணத்தை கொடுத்ததாகவும், அந்த அதிகாரி தனது பெயர் வெளிவருவதை விரும்பவில்லை” எனவும் கூறினார். மேலும், இதைப் பற்றி தான் கேட்டிருந்த கேள்விகள் மற்றும் விளக்கங்களுக்கு பெண்டகன் இன்னும் பதில் அளிக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

உளவுத்துறை வட்டாரங்களில், ஒரு கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் சம்பந்தப்பட்ட இச்செய்தி, குறைந்தது ஐந்து ஆண்டுகளுக்கு பிந்தையது என்று கிளிபென்ஸ்டைன் “All things Considered” இடம் கூறினார். மேலும், தற்போதைய COVID-19 தொற்றுநோய் “எங்கிருந்து வந்தது என்றே தெரியவில்லை” என்று அதிபர் ட்ரம்ப் கூறியிருப்பதில் இருந்து இந்த அறிக்கை “வெள்ளை மாளிகைக்கு இது அனுப்பபடவில்லை” என்றும் கிளிபென்ஸ்டைன் கூறுகிறார்.

இந்த 2017 அறிக்கையையைப் பற்றி கிளிபென்ஸ்டைன் மேலும் கூறுகையில், “சுவாச மண்டலத்தை குறிவைக்கும், அதி வேகமாகப் பரவக் கூடிய நோய்க்கிருமி அநேகமாக வைரஸின் அச்சுறுத்தல், கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத வகையில் இருக்கலாம் என்று குறிப்பிடப்பட்டிருப்பதாக” தெரிவித்துள்ளார்.
“யு.எஸ்.என்.ஓ.ஆர்.டி.காம் கிளைத் திட்டம் 3560: தொற்றுநோய்க் காய்ச்சல் மற்றும் தொற்று நோய்க்கான எதிர்ப்பு நடவடிக்கைகள்”, என தலைப்பு கொண்ட அந்த ஆவணத்தில், MERS தொற்று உட்பட முன் நடந்த அனைத்து கொரோனா வைரஸ் பரவல்கள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் நோய்த்தொற்றுகள் உலகளவில் மிகவும் பொதுவானவை என்றும் அந்த ஆவணம் குறிப்பிடுகிறது.

இந்த ஆவணம் இரகசியமானது என வகைப்படுத்தப்படாதது என்றாலும், பென்டகன் திட்டம் என்பது ஒரு தொற்றுநோய் பரவில் சூழல் ஏற்படுமானால், அதற்கான காரணங்கள் மற்றும் சாத்தியமான இடையூறுகளை முன்கூட்டியே கணித்து அறிந்துக் கொள்வதை நோக்கமாகக் கொண்ட ஒரு உள்ஆவணமாகும். உலகளாவிய பரவலின் போது ஏற்படக்கூடிய சூழ்நிலைகள் மற்றும் இராணுவம் எவ்வாறு செயல்படலாம் என்பதற்கான சாத்தியமான வழிகளை இது கோடிட்டுக் காட்டுகிறது.

ஆவணத்திற்குள் அதன் முடிவுகளுக்கு கூடுதல் ஆதாரங்களை வழங்கக்கூடிய இரகசியம் என கைப்படுத்தப்பட்ட வேறு சில ஆவணங்களுக்கான குறிப்புகளும் உள்ளன.

அறிக்கையின் முடிவுகள் தற்போது தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் மருத்துவ வல்லுநர்கள் முன்வைத்துள்ள இடர்பாடுகளான மருத்துவமனை படுக்கைகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் குறித்த பல கவலைகளை முன்வைத்துள்ளன.
இதன் ஒரு பிரிவு பின்வருமாறு கூறுகிறது: “பெரும்பாலான தொழில்மயமான நாடுகளில் கூட போதுமான மருத்துவமனை படுக்கைகள், மெக்கானிக்கல் வென்டிலேட்டர்கள் போன்ற சிறப்பு உபகரணங்கள் மற்றும் மருத்துவ ரீதியாக கடுமையான தொற்றுநோய்களின் போது மக்களுக்கு போதுமான அளவு சிகிச்சையளிக்கும் மருந்துகள் பற்றாக்குறை உள்ளன.”

மூலக்கட்டுரை: ஜேசன் ஸ்லோட்கின்
தமிழில்: லயா