கடந்த 44 ஆண்டுகளுக்கு முன்னர் அன்றைய பிரதமர் இந்திரா காந்தியால் பிரகடனப்படுத்தப்பட்ட நெருக்கடி நிலையை ஆர்எஸ்எஸ் இயக்கம் ஆதரித்ததா? இல்லையா? என்ற இருவேறு கருத்துகள் உலவுகின்றன. நெருக்கடி நிலையின்போது ஆர்எஸ்எஸ் இயக்கம் தடைசெய்யப்பட்டது.

கடந்த 1975ம் ஆண்டு ஜுன் மாதம் 25 மற்றும் 26ம் தேதிகளின் இடைபட்ட இரவுகளில் இந்த நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டது.
நெருக்கடி நிலையை எதிர்த்து ஜெயப்பிரகாஷ் நாராயணன் தலைமையில் எதிர்க்கட்சிகள் ஒன்றுதிரண்டு போராடின. அப்போராட்டத்தில் ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் மாணவர் அமைப்பான அகில் பாரதீய வித்யார்தி பரிஷத்(ஏபிவிபி) அமைப்பும் பங்கெடுத்துக் கொண்டது.

மேலும், அன்றைய ஆர்எஸ்எஸ் தலைவர் பாலாசாகேப் தியோரஸ் மற்றும் அந்த அமைப்புடன் நெருங்கிய தொடர்புடைய வாஜ்பாய் மற்றும் அத்வானி ஆகியோர் உள்ளிட்ட பலரும் சிறையில் அடைக்கப்பட்டனர். ஆனாலும், ஆர்எஸ்எஸ் அமைப்பு நெருக்கடி நிலையை ஆதரித்தது என்ற கருத்தை முன்வைக்கிறார் பாரதீய ஜனதாவின் சுப்ரமணிய சாமி.

அவர் கூறியிருப்பதாவது, “நெருக்கடி நிலையின்போது புனேயின் எரவாடா சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஆர்எஸ்எஸ் தலைவர் தியோரஸ், இந்திரா காந்திக்கு பல மன்னிப்புக் கடிதங்கள் எழுதி, அரசுக்கு எதிரான போராட்டங்களிலிருந்து தனது இயக்கத்தை ஒதுக்கிவைப்பதாக அவர் வாக்குறுதி அளித்தார். மேலும், இந்திரா காந்தியின் சர்ச்சைக்குரிய 20 அம்ச திட்டத்தை ஆதரித்து செயல்படப்போவதாகவும் தனது கடிதங்களில் தெரிவித்திருந்தார்.

மேலும், சிறையில் அடைக்கப்பட்ட வாஜ்பாயும், இந்திரா காந்திக்கு பல மன்னிப்புக் கடிதங்களை எழுதியவர்தான். நெருக்கடி நிலையை எதிர்த்து நடத்தப்படும் எந்தப் போராட்டங்களிலும் தான் கலந்துகொள்வதில்லை எனவும் அக்கடிதங்களில் வாக்குறுதி அளித்திருந்தார். எனவே, நெருக்கடி காலத்தின் பெரும்பான்மையான மாதங்கள் அவர் பரோலில் வெளியேதான் இருந்தார். நெருக்கடி நிலைக்கெதிரான போராட்டத்திற்கு ஆர்எஸ்எஸ் அமைப்பினர் துரோகம் இழைத்தனர்” என்றுள்ளார் சாமி.

சுப்ரமணிய சாமி மட்டுமல்லாது, நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டபோது, ஐபி(IB) அமைப்பின் துணைத் தலைவராக இருந்த ராஜேஸ்வர் என்ற முன்னாள் அதிகாரியும் சுப்ரமணிய சாமியின் கருத்தை வழிமொழிவது போன்றே பேசியுள்ளார்.

அவர் கூறியிருப்பதாவது, “ஆர்எஸ்எஸ் அமைப்பினர் நெருக்கடி நிலையை வெறுமனே ஆதரிக்க மட்டும் செய்யவில்லை. அவர்கள், இந்திரா காந்தியை தாண்டி, சஞ்சய் காந்தியுடனும் தொடர்பு வைத்துக்கொள்ள விரும்பினர்” என்றிருக்கிறார்.

இத்தகைய கருத்துகளின் அடிப்படையில் பார்க்கும்போது, ஆர்எஸ்எஸ் அமைப்பு நெருக்கடி நிலைக்கு ஆதரவாகவே செயல்பட்டுள்ளது என்பது புலனாகிறது. ஆனால், சமயம் கிடைக்கும்போதெல்லாம் இந்திரா காந்தி பிரகடனம் செய்த நெருக்கடி நிலை குறித்து பாரதீய ஜனதா கட்சியினர் விமர்சித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.