சென்னை:

பிரதமர் மோடியுடன் இன்று தமிழக முதல்வர் காணொளி காட்சி மூலம்  ஆலோசனை நடத்தியதாகவும், பல்வேறு கோரிக்கைகளை வைத்துள்ளதாகவும் செய்திகள் வெளியாயின. அதுதொடர்பான புகைப்படங்களையும் தமிழக அரசு வெளியிட்டிருந்தது.

ஆனால், பிரதமர் தமிழக முதல்வரிடம் ஆலோசனை நடத்தவில்லை என்று தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த முரண்பட்ட தகவல்கள் சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சனங்களை உருவாக்கி உள்ளது.

இன்று பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற காணொளி காட்சி மூலமான மாநில முதல்வர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் பேச ஒன்பது மாநில முதல்வர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டதாகவும், தமிழக முதல்வர் உள்பட பல மாநில முதல்வர்கள் தங்களது  ஆலோசனைகளை ஃபேக்ஸ் வாயிலாக அனுப்ப பிரதமர் அலுவலகம் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.

இந்த கூட்டத்தில் தமிழக எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட முதல்வர்கள் பேச அனுமதிக்கப்படவில்லை என்றும், இதன் காரணமாகவே கேரள முதல்வர் பினராயி விஜயன் புறக்கணித்ததாகவும் கூறப்படுகிறது.

ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாக இன்று பிரதமர் நடத்தி ஆலோசனை கூட்டத்தில்,  , மேகாலயா, மிசோரம், புதுச்சேரி, உத்தரகண்ட், இமாச்சல பிரதேசம், ஒடிசா, பீகார், குஜராத், ஹரியானா ஆகிய 9 மாநில முதல்வர்கள் மட்டுமே பேச அனுமதிக்கப்பட்டதாகவும், மற்ற மாநில முதல்வர்களுடன் பேச நேரம் இல்லை என்று கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதனால், மற்ற மாநில முதல்வர்கள் தங்கள் கருத்துக்களைக் கடிதமாக எழுதி அனுப்பும்படி கேட்டுக்கொள்ளப்பட்ட தாகவும், அதைத்தொடர்ந்தே தமிழக முதல்வர், மாநிலத்துக்கு தேவையான கோரிக்கைகளை பேக்ஸ் மூலம் அனுப்பி வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

பிரதமரின் இன்றைய ஆலோசனை கூட்டத்தில் பல மாநில முதல்வர்கள் புறக்கணிக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.  சில மாநில முதல்வர்கள்  சம்பிரதாயத்துக்காக வீடியோ கான்ஃபரன்ஸில் பங்கேற்றதாகவும், ஆனால், அவர்கள் பேச அனுமதிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

பிரதமரின் இந்த ஓரவஞ்சனை பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. எதிர்க்கட்சிகள் பிரதமரின் இந்த நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.