விடுதலைப் புலிகள்தான் போரை ஆரம்பித்தார்களா?

நெட்டிசன்

 ஈழத்தமிழர் வி. சபேசன் அவர்களது முகநூல் பதிவு:

LTTE started the war

விடுதலைப் புலிகள்தான் போரை ஆரம்பித்தார்கள் என்று பல இடங்களில் திரும்பத் திரும்ப சொல்லப்படுகிறது. விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் கூட இதை உண்மை என்று நம்புகின்ற அளவிற்கு இந்தப் பரப்புரை வலிமையாக இருக்கிறது.

புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மீறி புலிகளே போரை ஆரம்பித்தார்கள் என்பது மிகத் தவறான கருத்து. சிறிலங்கா அரசே போரை ஆரம்பித்தது.

ஆனால் ‘மாவிலாற்றின் அணையை மூடி புலிகள் போரை ஆரம்பித்தார்கள்’ என்று சுலபமாக வரலாற்றைத் திரித்து விடுகிறார்கள். மாவிலாறு சம்பந்தப்பட்ட பிரச்சனை ஒரு உள்ளுர்ப் பிரச்சனை. உள்ளுரிலேயே பேசித் தீர்த்திருக்கக் கூடிய ஒரு பிரச்சனை.

‘மாவிலாற்றின் அணையை மூடியதால் சண்டை தொடங்கியது’ என்கின்ற பரப்புரையை கேட்கின்ற தமிழ்நாட்டுத் தமிழர்கள், மாவிலாறு என்பது காவிரி ஆறு போன்று ஒரு பெரும் ஆறு என்று நினைக்கக் கூடும்.

மாவிலாறு என்பது ஒரு நீரோடையை விட சற்றுப் பெரியது. அவ்வளவுதான். பிரச்சனை வரும் வரை ‘மாவிலாறு’ என்கின்ற ஆறு ஒன்று இருப்பதோ, அதற்கு ஒரு அணை இருப்பதோ இலங்கைத் தீவில் வாழ்கின்ற 99.99 விழுக்காடு மக்களுக்குத் தெரியவே தெரியாது.

அந்தப் பகுதியிலே நீர் வழங்கலில் நடக்கின்ற பாகுபாடுகள் பற்றிய அதிருப்தியை வெளியிடுவதற்கு அந்தப் பகுதியின் போராளிகள் மாவிலாறு அணையை மூடினர். இதையடுத்து தமது விவசாயம் பாதிக்கப்படுவதாக அந்தப் பகுதியின் சிங்கள விவசாயிகள் ஆர்ப்பாட்டம் செய்தனர். இதை மகிந்தவின் அரசாங்கம் வேண்டும் என்றே பெரிய பிரச்சனையாக மாற்றியது.

உண்மையில் மாவிலாறு அணையை மூடுவதற்கான உத்தரவு புலிகளின் தலைமையிடம் இருந்து வரவில்லை. ஏற்கவே சொன்னது போன்று இது அவ்வளவு பெரிய பிரச்சனையும் இல்லை. சிறிய பிரச்னைகளை அந்தந்தப் பகுதிகளின் போராளிகளே கையாள்வார்கள்.

இதை உண்மையில் உள்ளுர் மட்டத்தில் பேசித் தீர்த்திருக்க முடியும். ஆனால் கொழும்பு இதில் தலையிட்டது. கண்காணிப்புக் குழுவினர் இது பற்றி புலிகளுடன் பேசிக் கொண்டிருந்த பொழுது, இலங்கை அரசின் விமானங்கள் குண்டு வீசித் தாக்குதலை ஆரம்பித்தன.

இலங்கை இராணுவம் மாவிலாற்று அணையை நோக்கி தரைவழியான படை நடவடிக்கைகளையும் தொடங்கியது. போரை தவிர்க்கும் பொருட்டு, புலிகள் மாவிலாற்று அணையை மீளத் திறந்து விட்டனர். ஆனால் சிறிலங்கா இராணுவம் போரைத் தொடர்ந்தது.

இதற்கு முன்னரே சிறிலங்கா அரசு புலிகள் மீது ‘கருணா குழு’ என்ற பெயரில் தனது இராணுவ நடவடிக்கைகளை ஆரம்பித்திருந்தது. கிழக்கு மாகாணத்தின் அரசியற்துறைப் பொறுப்பாளர் கவுசல்யன், தளபதி ரமணன் என்று பலர் இராணுவத்தின் துணைப் படையினரால் படுகொலை செய்யப்பட்டனர்.

அதற்கு முன்னர் புலிகளின் கப்பல் சர்வதேசக் கடற்பரப்பில் வைத்து மூழ்கடிக்கப்பட்டதையும் இதில் குறிப்பிட வேண்டும்.

பிரேமதாஸா காலத்திலும், சந்திரிகா காலத்திலும் புலிகளே முதலில் போரைத் தொடங்கினார்கள் என்று சொல்வார்கள். அதில் உண்மையும் உண்டு. இலங்கை அரசாங்கம் பலவிதமான ஆத்திரமூட்டல்களை மேற்கொண்டது என்பது உண்மை என்றாலும், போரைத் தொடங்குவதற்கான சண்டைகள் விடுதலைப் புலிகள் பக்கம் இருந்தே அப்பொழுது ஆரம்பிக்கப்பட்டன.

அப்படி இந்த முறை நடக்கக் கூடாது என்பதில் புலிகள் உறுதியாக இருந்தனர். இலங்கை இராணுவம் ‘கருணா குழு’ என்ற பெயரில் செய்த தாக்குதல்களுக்கு பதிலடியாக ‘மக்கள் படை’ என்ற பெயரில் சில தாக்குதல் நடத்தப்பட்டன. ஆனால் நேரடியான சண்டையை தொடங்கிய வர்களாக தாம் இருக்கக் கூடாது என்பதில் புலிகள் மிகக் கவனமாக இருந்தனர்.

புலிகளின் பக்கம் இருந்து போர் தொடங்கப்படவேயில்லை. இலங்கை அரசே போரைத் தொடங்கி யது. அப்படியிருந்தும் புலிகளே போரை ஆரம்பித்தது போன்று வரலாறு திரிக்கப்படுகின்றது. எம்மில் பலரும் அதை நம்பகின்ற கொடுமையும் நடக்கின்றது.

You may have missed