மும்பை

வாக்களிப்பு இயந்திரங்கள் கொள்முதல் செய்ததில் தேர்தல் ஆணையம் அளித்த தகவலுக்கும்  இயந்திரங்கள் விற்பனை செய்த நிறுவனங்கள் அளித்த தகவலுக்கும் எண்ணிக்கையில் வேறுபாடுகள் உள்ளன.

கடந்த 1989ஆம் வருடம் முதல் இந்தியாவில் வாக்களிப்பு இயந்திரங்கள் உபயோகிக்கப்பட்டு வருகின்றன.   இந்த இயந்திரம் வாக்களிப்பு இயந்திரம் மற்றும் வாக்குப் பதிவு இயந்திரம் என இரு பகுதிகளாக பிரிக்கப்பட்டிருக்கும்.    தற்போது வாக்கு ஒப்புகைச் சீட்டு இயந்திரமும் இத்துடன் இணைக்கப் படுகிறது.   இந்த வாக்களிப்பு இயந்திரங்களை ஐதராபாத்தில் உள்ள எலெக்ட்ரானிக் கார்பரேஷன் ஆஃப் இந்தியா என்னும் நிறுவனமும் பெங்களூருவில் உள்ள பாரத் எலெக்ட்ரானிக்ச் லிமிடெட் நிறுவனமும் உற்பத்தி செய்கின்றன.

மும்பையை சேர்ந்த சமூக ஆர்வலர் மனோரஞ்சன் ராய் என்பவர் இந்த வாக்களிப்பு இயந்திரங்கள் கொள்முதல் குறித்த விவரங்களை தகவல் அறியும் சட்டத்தின் கீழ் கேட்டிருந்தார்.    அவர் கேட்டு ஒரு வருடத்துக்குப் பிறகு அது குறித்த விவரங்கள் தரப்பட்டுள்ளன.    அந்த விவரங்களில் பல குழறுபடிகள் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

இது குறித்து ராய், ”கடந்த 1989ஆம் வருடத்தில் இருந்து 2017ஆம் வருடம் மே மாதம் 15ஆம் தேதிவரை தேர்தல் ஆணையம் மொத்தம் 10,05.662 வாக்களிப்பு இயந்திரங்களையும் 9,28,042 வாக்குப்பதிவு  இயந்திரங்களையும் பெங்களூருவில்  வாங்கி உள்ளதாக கூறி உள்ளது.   அதே போல் ஐதராபத்தில் இருந்து 10,14,644 வாக்களிப்பு இயந்திரங்களையும் 9,34,031 வாக்குப் பதிவு இயந்திரங்களையும் வாங்கி உள்ளதாக தெரிவித்துள்ளது.

கடந்த 2016-17 ஆம் வருடம் 13,95,306 வாக்களிப்பு இயந்திரங்களும் 9,30,716 வாக்குப் பதிவு இயந்திரங்களும் வாங்கப்பட்டதாக சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம் தகவல் ஒன்றை அளித்தது.

பெங்களூரு பாரத் எலெக்டானிக்ஸ் நிறுவனம் 1,25,000 வாக்களிப்பு இயந்திரங்களும் 1,90,000 வாக்கு இயந்திரங்களும் தேர்தல் ஆணையத்துக்கு அளித்ததாக கூறி உள்ளது.  ஐதராபாத் எலெக்ட்ரானிக் கார்பொரேஷன் நிறுவனம் முதலில் 2,22,925  வாக்களிப்பு இயந்திரங்களும் 2,11,875 இயந்திரங்களும்,  இரண்டாம் முறையாக 4,97,348 வாக்களிப்பு இயந்திரங்களும் 3,07,030 வாக்களிப்பு இயந்திரங்களையும் அனுப்பி வைத்ததாக கூறி உள்ளது.

இந்த இரு தகவல்களிலும் இயந்திரங்களின் மொத்த எண்ணிக்கையில் பெருமளவு வித்தியாசங்கள் உள்ளன.   அதிக அளவில் வாங்கப்பட்டுள்ள வாக்களிப்பு இயந்திரஙக்ள் எங்கு அனுப்பட்டன என்பது குறித்தும் அவை எதற்கு பயன்படுத்தப் பட்டன என்பது குறித்தும் எந்த தகவலும் இல்லை.   இதில் எங்கோ ஏதோ தவறுகள் நடந்து வருவதாக தோன்றுகிறது.”  என தெரிவித்துள்ளார்.

இது குறித்த முழு விவரங்களையும் அளிக்க வேண்டும் என ராய் மும்பை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை அளித்துள்ளார்.