உளுந்தூர்பேட்டை அருகே மழை வேண்டி மூதாட்டிகள் ஒப்பாரி வைத்து வேண்டுதல் மேற்கொண்டது வினோதமாக பார்க்கப்பட்டது.

தமிழகம் முழுவதும் கடுமையான கோடை வெயிலின் தாக்கம் மற்றும் போதிய மழை பெய்யாத நிலையில் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்து தண்ணீருக்கு நகரம் மற்றும் கிராமப்புறத்தில் வசிக்கும் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். மேலும் நீர்நிலைகள் வறண்டு கிடப்பதால் கால்நடைகளும் தண்ணீருக்காக அலைந்து வருகிறது. மழைவேண்டி பல்வேறு இடங்களில் யாகங்களும், கோயில்களில் சிறப்பு பூஜைகளும் நடந்து வருகிறது.

அந்த வகையில் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கிளியூர் கிராமத்தில் மழை வேண்டி மூதாட்டிகள் நூதன வழிபாட்டில் நேற்று ஈடுபட்டனர். அந்த கிராமத்தில் உள்ள எல்லைக்கல்லுக்கு மஞ்சள் பூசி, குங்குமம் வைத்து, மாலை அணிவித்து அதன் முன் விரதம் இருந்து எடுத்து வந்த கூழ் குடத்தை படையல் வைத்து வழிபட்டனர். சிறிது நேரம் கழித்து எல்லைக்கல் முன் அமர்ந்த 10க்கும் மேற்பட்ட மூதாட்டிகள் மழை வேண்டி ஒப்பாரி வைத்தனர்.

இதுகுறித்து மூதாட்டிகள் கூறியதாவது, தற்போது, நிலவி வரும் பருவநிலை மாற்றம், பருவமழை பொய்த்து போதல், நீர்நிலைகள் ஆக்கிரமிப்புகள், குடியிருப்புகளின் எண்ணிக்கை அதிகரிப்பால் மழை பெய்யாமல் போனது. இதனால், எல்லைக்கல்லுக்கு மஞ்சள் பூசி, குங்குமம் வைத்து, மாலை அணிவித்து அதன் முன் விரதம் இருந்து எடுத்து வந்த கூழ் குடத்தை படையல் வைத்து வழிபடுவதை காலம் காலமாக கடைபிடித்து வருகிறோம். இந்த வழிபாடு மழை வேண்டியும், விவசாயம் செழிக்கவும் மேற்கொள்ளப்படும் ஒன்றாகும். எங்கள் மூதாதையர்கள் காலந்தொட்டு செய்து வந்த முறையை நாங்கள் பின்பற்றி வருகிறோம் என்றனர்.

அரூர்: தர்மபுரி மாவட்டத்தில் பருவமழை பொய்த்ததால் கடும் வறட்சி நிலவி வருகிறது. அருகிலேயே காவிரி ஆறு ஓடினாலும் தர்மபுரி மாவட்டத்தில் பாசன தேவைக்கு பயன்படுத்த முடியாத நிலையில், முழுக்க முழுக்க மழையை நம்பியே மக்கள் வேளாண் பணிகளை மேற்கொள்கின்றனர். வானம் பார்த்த பூமியான விளை நிலங்களில் மானாவாரி பயிர்களை சாகுபடி செய்து வருகின்றனர். அருகிலுள்ள கிருஷ்ணகிரி மாவட்டத்தை வளம் கொழிக்கச்செய்யும் தென்பெண்ணையாறு தர்மபுரி மாவட்டத்தில் அரூர் பகுதியையும் தொட்டவாறு சென்றாலும், ஆண்டு முழுவதும் வறண்ட நிலையிலேயே காணப்படுவதால் எந்த பயனும் கிடைப்ப தில்லை. அதேவேளையில் குடிநீர் தட்டுப்பாடும் அதிகரித்துள்ளது. இதையடுதது, அரூர் பகுதியில் மழை வேண்டி ஆங்காங்கே சிறப்பு வழிபாடு செய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று 50க்கும் மேற்பட்ட பெண்கள் அரூர் வாணியாற்றில் திரண்டனர். பின்னர், காவேரி அம்மன் கோயிலுக்கு சென்று அங்குள்ள பாறைகளுக்கு மஞ்சள், குங்குமம் இட்டு, மாலை அணிவித்தனர். பின்னர், பொரி தூவி சிறப்பு பூஜைகள் செய்தனர். தொடர்ந்து மழை வேண்டி ஒப்பாரி வைத்தனர். இறுதியில், அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இவ்வாறு செய்தால் மழை பெய்யும் என்பது ஐதீகம் என பெண்கள் தெரிவித்தனர்.