சென்னை: தமிழக தலைநகரின் தண்ணீர் தேவையை ஈடுகட்டும் வகையில் கொண்டுவரப்பட்ட திட்டமான கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டத்தை அதிகம் சார்ந்திருப்பது குறித்து அறிவியலாளர்கள், சமூக செயல்பாட்டாளர்கள் மற்றும் அதிகாரிகளிடையே மாறுபட்ட கருத்துக்கள் நிலவுகின்றன.

இதுதொடர்பாக கூறப்படுவதாவது; கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் என்ற கருத்தை அறிவியலாளர்கள் வலியுறுத்தும் அதேவேளையில், இருக்கும் நீர்நிலைகளை சிறப்பான முறையில் பண்படுத்திப் பாதுகாத்தால் இத்திட்டத்தை சார்ந்திருக்க வேண்டிய அவசியமில்லை என்று சமூக செயல்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.

“உப்புநீரை நன்னீராக்கும் திட்டத்தில் எனக்கு உடன்பாடில்லை. இதுவொரு செலவுமிகுந்த விஷயம் என்பதால் நமக்கு இது தேவையில்லை. இதனால் ஏற்படும் மோசமான சுற்றுச்சூழல் பாதிப்புகளையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்” என்றார் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி ஷாந்த ஷீலா நாயர்.

“இது பருவநிலை சாராத ஒரு திட்டம் என்பதால், இதர மாற்றுத் திட்டங்களுடன் சேர்த்து, இதையும் நாம் மேம்படுத்த வேண்டும். இதற்கு நிறைய எதிர்ப்புகள் உள்ள‍து என்பதை அறிவேன். இது கடல்சார் சூழலை கெடுக்கிறது என்பதையும் ஒப்புக்கொள்கிறேன். ஆனால், நிலக்கரி ஆற்றல் மற்றும் அணு ஆற்றல் போன்று இதையும் ஒரு மாற்று ஏற்பாடாக நாம் முன்னெடுக்க வேண்டும்” என்றுள்ளார் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி அசோக் வர்தன் ஷெட்டி.