கொல்கத்தா

ம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சீதாராம் யெச்சூரி மீண்டும் மாநிலங்களவை உறுப்பினராவதில் கருத்து வேற்றுமை எழுந்துள்ளது.

தற்போது காலியாக உள்ள மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்குத் தேர்தல்கள் நடைபெற உள்ளன.   இதில் மேற்கு வங்க மாநிலத்தில் காலியாகும் இடத்துக்கு மூத்த கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் சீதாராம் யெச்சூரியை தேர்வு செய்ய கம்யூனிஸ்ட் கட்சி விரும்பியது.   இது குறித்து கட்சியின் பொலிட் பீரோ கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது.

மேற்கு வங்கத்தில் காலியாக உள்ள 5 இடங்களில் ஆளும் கட்சியான திருணாமுல் காங்கிரஸ் நான்கு இடங்களை எளிதாக வெல்ல முடியும்.  தற்போது மேற்கு வங்க சட்டப்பேரவையில் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 26 உறுப்பினர்கள் மட்டுமே உள்ளனர்.  எனவே இந்த உறுப்பினர்களை மட்டும் வைத்துக் கொண்டு கம்யூனிஸ்ட் கட்சியால் வெற்றி பெற முடியாது.

எனவே ஐந்தாவது உறுப்பினர் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கூட்டணி அல்லது காங்கிரஸ் மற்றும் திருணாமுல் காங்கிரஸ் கூட்டணி மட்டுமே தேர்வு செய்யும் நிலை உள்ளது.  இந்த அனைத்து அம்சங்களும் பொலிட் பீரோ கூட்டத்தில் ஆராயப்பட்டுள்ளது.  வேட்பு மனு பதிவு செய்ய தேதி உள்ளதால் இது குறித்து ஒரு நிலையான முடிவு எடுப்பதை ஒத்திப் போட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும் இந்த கூட்டத்தில் கலந்துக் கொண்ட ஒரு சில உறுப்பினர்கள் காங்கிரஸ் ஆதரவு கோருவதற்கு விருப்பமின்மையை தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.  கம்யூனிஸ்ட் பொலிட் பீரோ உறுப்பினர்களில் சிலர் கடந்த 2017 ஆம் வருடம்  சீதாராம் யெச்சூரி மீண்டும் மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யக் காங்கிரஸ் உதவியைக் கோர மறுத்துள்ளனர்.

அப்போதைய காங்கிரஸ் தலைவரான ராகுல் காந்தி அவராகவே முன்வந்து சீதாராம் யெச்சூரிக்கு ஆதரவு தெரிவித்தும் கம்யூனிஸ்ட் கட்சி அதை ஏற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இம்முறையும் காங்கிரஸ் யெச்சூரிக்கு ஆதரவு அளிக்கத் தயாராக உள்ளதாக மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.  மேலும் தற்போதைய நிலையில் பாஜக வை எதிர்க்க சீதாராம் யெச்சூரி போன்ற மூத்த தலைவர்கள் உதவி காங்கிரஸுக்கு தேவைபடுவ்தாக அவர் கூறி உள்ளார்.