சிவராஜ் சிங் சவுகான் நேருவின் கால் தூசுக்கு சமமில்லாதவர் : திக்விஜய் சிங் கண்டனம்

போபால்

விதி எண் நீக்கம் குறித்து நேருவைத் தாக்கிய ம.பி. முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சவுகானுக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் திக் விஜய் சிங் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்ற வாரம் திங்கள் அன்று ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்குச் சிறப்பு அந்தஸ்து அளித்த விதி எண் 370 மற்றும் 35 ஏ நீக்கம் செய்யப்பட்டது.   மேலும் மாநிலத்தை ஜம்மு மற்றும் காஷ்மீர் என  இரு யூனியன் பிரதேசமாகப் பிரித்த மத்திய அரசு லடாக் பகுதியை நேரடியாக மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தது.  இதற்குக் காங்கிரஸ் உள்ளிட்ட பல எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

சிவராஜ் சிங் சவுகான்

மத்தியப் பிரதேச மாநில முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், “நாட்டின்  பல பிரச்சினைகளுக்குக் காங்கிரஸ் காரணமாக இருந்துள்ளது.  நேரு விதி எண் 370 ஐ அறிமுகம் செய்து காஷ்மீர் மாநிலத்துக்குச் சிறப்பு அந்தஸ்து அளித்ததன் மூலம் மிகப் பெரிய பாவத்தை செய்தார்.   தற்போது அந்த விதி எண் 370 ஐ நீக்குவதன் மூலம் நேருவின் சரித்திரத் தவற்றை மோடி சரி செய்து விட்டார்” என கூறினார்.

இதற்குக் காங்கிரஸ் மூத்த தலைவர் திக் விஜய் சிங், “நேருவின் கால் தூசுக்கு சமமில்லாத சிவராஜ் சிங் சவுகான் இவ்வாறு விமர்சித்ததற்கு வெட்கப்படவேண்டும்.    மத்திய அரசு சரியான அபிப்ராயமின்றி செயல்படுவதால் நாம் காஷ்மீரை இழந்து விடும் அபாயம் உண்டு.   காஷ்மீரில் தற்போது நடப்பதைப்  பார்க்கும் போது நான் சொல்வது உண்மை என்பது மக்களுக்குப் புரியும்.

நமது முக்கிய பணி காஷ்மீரைக் காப்பதாகும்.  நான் மோடி, அமித் ஷா மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோர் சிறிது சிந்தித்துச் செயல்பட வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.   இல்லையெனில் காஷ்மீர் நமது கைகளை விட்டு நழுவி  விடும்.” என தெரிவித்துள்ளார்.

மத்தியப் பிரதேச தற்போதைய முதல்வர் கமல்நாத், “நாட்டின் முதல்  பிரதமரான நேரு  நமது  சுதந்திரத்துக்காகப் போராடி உள்ளார்.  நவீன இந்தியாவை உருவாக்கிய அவர் பணி என்றும் மறக்க முடியாது.  அப்படி இருக்க முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் இவ்வாறு தெரிவித்தது மிகவும் கண்டனத்துக்குரியது ஆகும்.” என தெரிவித்துள்ளார்.

கார்ட்டூன் கேலரி