போபால்

தீவிரவாதிகளை கொல்ல சர்ஜிகல் ஸ்டிரைக் தேவை இல்லை எனவும் சாத்வி பிரக்ஞா தாகுரின் சாபமே போதுமானது என திக்விஜய் சிங் கிண்டல் செய்துள்ளார்.

நடைபெற்று வரும் மக்களவை தேர்தலில் போபால் தொகுதியில் வரும் மே மாதம் 12 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த தொகுதியில் மூத்த காங்கிரஸ் தலைவர் திக் விஜய் சிங்குக்கு எதிராக பாஜக சார்பில் சாத்வி பிரக்ஞா தாகுர் போட்டியிடுகிறார். இவர் மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் 8 வருடங்கள் சிறையில் அடைக்கப்பட்டு தற்போது ஜாமீனில் வெளி வந்துள்ளார். இந்த வழக்கு இன்னும் தொடர்ந்து வருகிறது.

பாஜக வேட்பாளரான சாத்வி பிரக்ஞா தாகுர் சமீபத்தில் மாலேகான் வழக்கில் தம்மைகைது செய்து கொடுமைப்படுத்திய காவல்துறை அதிகாரி ஹேமந்த் கர்கரேவுக்கு தாம் சாபம் அளித்ததால் அவர் மும்பை 26/11 தீவிரவாத தாக்குதலில் கொல்லப்பட்டதாக தெரிவித்தார். இதற்கு நாடெங்கும் எதிர்ப்பு கிளம்பியதால் சாத்வி மன்னிப்பு கேட்டார். தேர்தல் ஆணையம் அவருக்கு நோட்டிஸ் அனுப்பி உள்ளது.

இந்நிலையில் அசோகா கார்டனில் நடந்த தேர்தல் பிரசார பேரணியில் திக் விஜய் சிங், “போபாலில் போட்டியிட பாஜக தலைவர்கள் பலரும் மறுத்துள்ளனர். உமா பாரதிக்கு இங்கு போட்டியிட விருப்பம் இல்லாமலும் கவுருக்கு திடீரென உடல்நிலை சரியில்லாமல் போனதற்கு காரணம் தோல்வி பயம் மட்டுமே ஆகும். அதனால் சாத்வி பிரக்ஞா தாகுர் அவசர வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

அவர் தனது சாபத்தினால் ஹேமந்த் கர்கரே தீவிரவாதிகளால் கொல்லப்பட்டதாக கூறுகிறார். ஹேமந்த் கர்கரேவின் தியாகத்தை கொச்சைப்படுத்துகிறார். இனி மசூர் அசாத் உள்ளிட்ட பல தீவிரவாதிகளை அழிக்க சர்ஜிகல் ஸ்டிரைக் தேவைப்படாது. சாத்வியின் சாபம் மட்டுமே போதுமானது.

இங்கு இந்து, முஸ்லிம், கிறித்தவர், சீக்கியர் அனைவரும் சகோதரர்களாக வாழ்ந்து வருகிறோம். இந்த நாடு இஸ்லாமியரால் 500 வருடங்களுக்கு மேல் ஆளப்பட்டது. இதனால் எந்த ஒரு மதமும் அழியவில்லை. இந்து மதம் அழிக்கப்படுவதால் இந்துக்கள் ஒன்று சேர்ந்து வருகினர் என மோடி கூறுவது தவறானதாகும்.” என பேசி உள்ளார்.