இந்தியாவில் கிராமப்புறங்களில் வசிக்கும் பெண்களில் 10 ல் 3 பேரும், நகர்ப்புறங்களில் வசிக்கும் பெண்களில் 10 ல் நான்கு பேர் மட்டுமே இதுவரை இணையத்தைப் பயன்படுத்துவது குறித்து அறிந்து வைத்திருக்கின்றனர்.

சராசரியாக 42.6 சதவீத பெண்களும், 62.16 சதவீத ஆண்கள் மட்டுமே இந்தியாவில் இணையத்தைப் பயன்படுத்தியுள்ளனர் என்று நேற்று வெளியிடப்பட்ட ஐந்தாவது தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு (என்.எஃப்.எச்.எஸ்) தரவுகளின்படி தெரியவந்திருக்கிறது.

பொதுவாக என்.எஃப்.எச்.எஸ், மக்கள் தொகை, ஆரோக்கியம், குடும்பக் கட்டுப்பாடு மற்றும் ஊட்டச்சத்து குறித்த தரவுகளை மட்டுமே சேகரிக்கும், முதல் முறையாக இணையத்தை பயன்படுத்தும் ஆண்கள் மற்றும் பெண்களை பற்றிய புள்ளிவிவரங்களை இந்த முறை சேகரித்திருக்கிறது.

இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்டுள்ள செய்தி மூலம் இதுகுறித்த புள்ளிவிவரங்கள் தெரியவந்துள்ளது.

நகரங்களில் வசிக்கும் பெண்களில் 56.81 சதவீதமும் ஆண்களில் 73.76 சதவீதமும் இணையத்தை பயன்படுத்தியிருக்கிறார்கள்.

கிராமப்புறத்தில் வசிப்பவர்களில் 55.6 சதவீத ஆண்கள் இணையத்தை பயன்படுத்தும் அதே நேரத்தில் மிகவும் குறைந்த அளவான 33.94 சதவீத பெண்களே இணையத்தை பயன்படுத்துகின்றனர்,

இந்தியாவில், 10 மாநிலங்கள் மற்றும் மூன்று யூனியன் பிரதேசங்களை சேர்ந்த 50 சதவீதத்துக்கும் அதிகமான நகர்ப்புற பெண்கள் இணையத்தைப் பயன்படுத்தியுள்ளனர் : கோவா (78.1%), இமாச்சலப் பிரதேசம் (78.9%), கேரளா (64.9%), மகாராஷ்டிரா (54.3%), மணிப்பூர் (50.8%), மேகாலயா (57.8%), மிசோரம் (83.8%), நாகாலாந்து (66.5%), சிக்கிம் (90%), ஜே & கே (55%), லடாக் (66.5%), லக்ஷ்வதீப் (61.80%).

நகர்ப்புற இந்தியாவில் இணையத்தைப் பயன்படுத்திய பெண்கள் எண்ணிக்கையில் மிகக் குறைந்த சதவீதத்தை ஐந்து மாநிலங்கள் பதிவு செய்துள்ளன : ஆந்திரா (33.9%), பீகார் (38.4%), திரிபுரா (36.6%), தெலுங்கானா (43.9%) மற்றும் குஜராத் (48.9%).

கிராமப்புற இந்தியாவில் இதுவரை இணையத்தைப் பயன்படுத்திய பெண்களில் மிகக் குறைந்த சதவீதத்தை பதிவு செய்திருக்கும் ஐந்து மாநிலங்கள் : மேற்கு வங்கம் (14%), ஆந்திரா (15.4%), தெலுங்கானா (15.8%), திரிபுரா (17.7%) மற்றும் பீகார் (17 %).

நகர்ப்புற இந்தியாவில் ஆண்களில் மிக மோசமாக : பீகார் (58.4%), மேகாலயா (59.2%), மேற்கு வங்கம் (64.6%), ஆந்திரா (65.1%) மற்றும் அசாம் (67.4%) மாநிலங்கள் உள்ளன.

கிராமப்புற இந்தியாவில் 8 மாநிலங்கள் மட்டுமே 50 சதவீதத்திற்கும் அதிகமான ஆண்கள் இணையத்தை பயன்படுத்தியிருப்பதாக பதிவாகி இருக்கிறது, கோவா (76.6%), இமாச்சலப் பிரதேசம் (65.1%), கர்நாடகா (55.6%), கேரளா (74.2%), மணிப்பூர் (68.2) %), மிசோரம் (63.9%), நாகாலாந்து (55.2%) மற்றும் சிக்கிம் (69.5%).

இணைய பயன்பாட்டில் மிக குறைந்த எண்ணிக்கையிலான கிராமப்புற ஆண்கள் உள்ள ஐந்து மாநிலங்கள் : அசாம் (37.8%), மேற்கு வங்கம் (38.3%), மேகாலயா (38.5%), பீகார் (39.4%) மற்றும் ஆந்திரா (41.5%) ஆகும்.

கொரோனா காரணமாக தடைபட்ட இந்த கணக்கெடுக்கும் பணி தமிழகம் உள்ளிட்ட மேலும் 14 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

டிஜிட்டல் இந்தியா என்ற கோஷம் பணமதிப்பிழப்பிற்கு பின் அனைவரின் காதுகளிலும் பல்வேறு ஊடகங்கள் வழியாக ஒலித்துக் கொண்டிருக்க, இந்தியாவின் 22 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் 3.07 லட்சம் குடும்பங்களில் எடுக்கப்பட்ட இந்த புள்ளிவிவரம், சராசரி இந்தியனின் இணைய பயன்பாடு மிக மோசமாக இருப்பதை தெளிவு படுத்துகிறது. அதே வேளையில், கொரோனா காரணமாக ஆன்லைனில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை என்னவாக இருக்கும் என்ற கேள்வியையும் எழுப்புகிறது.