போபால்: மத்தியப் பிரதேச மாநில முன்னாள் காங்கிரஸ் முதல்வர் திக்விஜய் சிங், ராமர் கோயில் கட்டுவதற்காக, ரூ.1.11 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார்.

அதற்கான காசோலையை பிரதமர் மோடிக்கு அனுப்பி வைத்துள்ள திக்விஜய் சிங், கூடவே நீண்ட வேண்டுகோளையும் சேர்த்து அனுப்பியுள்ளார்.

லத்தி மற்றும் வாட்களுடன், விஷ்வ இந்து பரிஷத் நடத்திய, ராமர் கோயில் கட்டுவதற்கான நிதி திரட்டும் நிகழ்வு குறித்து அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.

அவர் கூறியுள்ளதாவது, “வாட்களையும் லத்திகளையும் தூக்கிக்கொண்டு, முழக்கமிட்டுக் கொண்டு, சமய வெறியைத் தூண்டுவதானது, எந்த சமயத்தின் மத நிகழ்வாகவும் இருக்க முடியாது, அத்தகைய நிகழ்வுகள் இந்து மதத்தின் ஒரு பகுதியல்ல.

இதனால், மாநிலத்தின் சில பகுதிகளில் விரும்பத்தகாத நிகழ்வுகள் ஏற்பட்டுள்ளன. இதனால், மாநிலத்தின் சமூக நல்லிணக்கம் பாதிக்கப்பட்டுள்ளது. பிற மத சமூகங்கள் எதுவும், ராமர் கோயில் கட்டுவதற்கு எதிராக இல்லை.

எனவே, நாட்டின் பிரதமர் என்ற முறையில், இத்தகைய தவறான வகையில் நடைபெறும் நிதிசேர்ப்பு நிகழ்வுகளுக்கு தடைவிதிக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார் திக்விஜய்சிங்.