பாக்கிஸ்தான் பயங்கரவாத அமைப்பிடம் பணம் வாங்கும் பாஜக! காங்கிரஸ் தலைவர் பகீர் தகவல்

போபால்:

பாகிஸ்தான் உளவு மற்றும் பயங்கரவாத அமைப்பிடம் இருந்து பாஜக மற்றும் அதன் கூட்டணி இந்துத்துவா அமைப்புகளான பஜ்ரங் தள் உள்பட சில  அமைப்புகள் நிதி உதவி பெற்றதாக காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய்சிங் தெரிவித்து உள்ளார். இது சர்ச்சைகளை  ஏற்படுத்தி உள்ளது.

இதுதொடர்பாக  காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ம.பி. மாநில முன்னாள் முதல்வருமான திக்விஜய்சிங் பதிவிட்டிருந்த டிவிட்டில்,  இந்த நாட்டில் முஸ்லிம்களை விட முஸ்லிம்கள் அல்லாதவர்கள்தான் பாகிஸ்தானுக்காக உளவு பார்க்கின்றனர் என கூறியிருந்தார்.

திக்விஜய்சிங்கின் இக்கருத்துக்கு பாஜக, பஜ்ரங் தள் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில், அது தொடர்பாக  மத்தியப் பிரதேச மாநிலம், பிந்த் நகரில்செய்தியாளர்களை சந்தித்த திக்விஜய்சிங் விளக்கம் அளித்தார்.

அப்போது,  “ஐஎஸ்ஐயிடம் பாஜக பணம் வாங்குவதாக நான் கூறவில்லை. சில செய்தி சேனல்களில்  இவ்வாறு செய்தி ஒளிபரப்பப்படுகிறது. இது தவறான செய்தியாகும்’ என்று கூறினார்.

மேலும், அவர் தனது டிவிட்டர் பக்கத்தில்,

“பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக பஜ்ரங் தளம் மற்றும் பாஜகவைச் சேர்ந்தவர்களை மத்தியப் பிரதேச போலீஸார் கைது செய்துள்ளனர். நான் தான் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்தேன். என்னுடைய நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறேன். இது தொடர்பாக பாஜகவிடம் ஏன் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பாமல் இருக்கிறார்கள்?’ என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த விவகாரம் குறித்து பேசிய மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வரும், பாஜக மூத்த தலைவருமான சிவராஜ் சிங் சவுகான்,  “திக்விஜய் சிங் நம்பகத்தன்மையை இழந்துவிட்டார். சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இவ்வாறு கூறியுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும்,  ஐஎஸ்ஐ அமைப்பு கூறுவதையே திக்விஜய் சிங்கும் கூறுகிறார். பயங்கரவாதி ஒஸாமா பின்லேடனை ஒஸாமாஜி என்று மரியாதையுடன் அழைத்தவர் திக்விஜய் சிங்’ என்றும் விமர்சித்து உள்ளார்.

சமீபத்தில், நாட்டின்  முக்கியமான விவரங்களை பாகிஸ்தானியர்களுக்கு உளவு  தெரிவித்ததாக,  மத்தியபிரதேச மாநிலத்தின் சத்னா மாவட்டத்தைச் சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.