Random image

அம்மா சங்கத்தில் திலிப் : மௌனம் கலைத்த மோகன்லால்

திருவனந்தபுரம்

லையள நடிகர் சங்கத்தில் திலிப் மீண்டும் இணப்பதாக முடிவு எடுக்கப்பட்ட விவகாரத்தில் அதன் தலைவர் மோகன்லால் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

அம்மா என அழைக்கப்படும் மலையாள நடிகர் சங்கத்தின் தலைவராக சமீபத்தில் மோகன்லால் தேர்வு செய்யப்பட்டார்.   கடந்த வருடம் ஒரு நடிகை கடத்தப்பட்டு பலாத்காரம் செய்யப்பட்டதாக எழுந்த புகாரில் நடிகர் திலீப் கைது செய்யப்பட்டு சுமார் 85 நாட்களுக்குப் பின் ஜாமீனில் வந்தார்.   திலீப்பை கைது செய்ததால் அவர் சங்கத்தில் இருந்து விலக்கப்பட்டார்.

தற்போது அவரை மீண்டும் சங்கத்தில் இணைக்க ஒப்புதல் அளிக்கபட்டுள்ளது.   இதனால் பாதிக்கப்பட்ட அந்த நடிகையும்  அவருடைய நெருங்கிய மூன்று தோழிகளும் அம்மா சங்கத்தில் இருந்து விலகினார்கள்.  அத்துடன் மகளிர் அணியை சேர்ந்த அவர்கள் சங்கம் மனிதாபிமானம் இல்லாமலும் பெண்களுக்கு எதிராகவும் உள்ளதாக குற்றம் சாட்டி உள்ளனர்.

இதை ஒட்டி தான் நிரபராதி என நிரூபிக்கப் பட்ட பின்பு சங்கத்தில் இணைவதாக திலீப் தெரிவித்தார்.   அம்மா சங்கத்  தலைவர் மோகன்லால் இது குறித்து இதுவரை ஒன்றும் பேசாமல் இருந்தார்.   அதே நேரத்தில் சமூக வலை தளங்களில் நடிகைகளுக்கு ஆதரவாகவும் மோகன்லாலுக்கு எதிராகவும் குரல்கள் எழுந்தன.

தற்போது மோகன்லால், “அம்மாவின் வருடாந்திர பொதுக்குழுக் கூட்டம் கடந்த 26ஆம் தேதி நடந்தது.  அப்போது நடிகர் திலீப்பை மீண்டும் சங்கத்தில் சேர்க்க முடிவெடுக்கப்பட்டது.    முன்பு பாலியல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டதால் நடிகர் திலீப் சங்கத்தில் இருந்து நீக்கப்பட்டார்.   அது ஜனநாயக அடிப்படையில் எடுத்த முடிவாகும்.   அதே போல் அவரை மீண்டும் இணைக்கவும் ஜனநாயக ரீதியில் முடிவு செய்யப்பட்டது.

அந்த முடிவை நாங்கள் இன்னும் திலீப்புக்கு தெரிவிக்கவே இல்லை.   ஆயினும் அதற்குள் இங்கு இவ்வளவு கலாட்டா ஆகி விட்டது.   நாங்கள் மதிக்கும் பலரும் எங்களை எதிர்க்க தொடங்கி உள்ளனர்.  அத்துடன் எங்கள் உருவ பொம்மைகளும் எரிக்கப்படுகின்றன.   பொதுக் குழுவில் பங்கேற்காத அம்மா உறுப்பினர்கள் அதற்குப் பின் தங்களின் எதிர்ப்பை தெரிவித்து சங்கத்தை விட்டு வெளியேறி உள்ளனர்.

அதே நேரத்தில் சங்கம் அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க தயாராக உள்ளது.  மாறுபட்ட கருத்துக்கள் தெரிவிப்போருக்கு நாங்கள் என்றுமே கண்டனம் தெரிவித்ததில்லை.  சங்கத்தை அழிக்க நினைப்போரை மட்டுமே புறக்கணிக்கிறோம்” என ஒரு விளக்கக் கடிதம் அளித்துள்ளார்.