பாட்னா :

மே.வங்காள மாநிலத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரினாமூல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்த மாநிலத்தில் அடுத்த ஆண்டு மே மாதம் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது.

மம்தாவை வீழ்த்தி விட்டு, தங்கள் ஆட்சியை கொண்டு வர பா.ஜ.க. தலைவர்கள் இப்போதே தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். சில தினங்களுக்கு முன்னர் மத்திய உள்துறை அமைச்சர் அமீத்ஷா, பழங்குடியின மக்கள் வாழும் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

“மே.வங்க மாநிலத்தில் மூன்றில் இரண்டு பங்கு தொகுதிகளில் வென்று ஆட்சி அமைப்போம்” என அப்போது அமீத்ஷா சபதம் செய்தார்.

அங்குள்ள கிழக்கு மிட்னாபூர் மாவட்டத்தில் உள்ள ஹால்டியா நகரில் நடந்த பொதுக்கூட்டத்தில் மாநில பா.ஜ.க. தலைவர் திலீப் கோஷ் பங்கேற்று பேசும் போது, “மே.வங்கத்தில் மாநில போலீஸ் பாதுகாப்புடன் தேர்தல் நடைபெறாது. மத்திய படைகள் பாதுகாப்புடன் தான் தேர்தல் நடக்கும்” என்று குறிப்பிட்டார்.

“இன்னும் ஆறு மாதங்களில் திரினாமூல் காங்கிரசார் தங்கள் போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும்” என்று தெரிவித்த திலீப் கோஷ் “இல்லையென்றால், உங்கள் கை, கால்கள் மற்றும் விலா எலும்புகள் உடைக்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுவீர்கள்” என்று பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்தார்.

“இதன் பின்னும் திருந்தவில்லை என்றால், திரினாமூல் காங்கிரசார் சுடுகாட்டுக்கு போக வேண்டியது தான்” என திலீப் கோஷ் மிரட்டல் விடுத்தார்.

– பா. பாரதி