தினகரன் எஸ்கேப்?: டில்லி மிரட்டல் காரணமா?

நியூஸ்பாண்ட்:

அதிமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் எங்கே இருக்கிறார் என்று தெரியாமல் அவரது ஆதரவாளர்கள் தடுமாறிவருகிறார்கள்.

அதிமுகவைப் பொறுத்தவரை தற்போது ஓபிஎஸ், ஈபிஎஸ், டிடிவி தினகரன் ஆகியோர் தலைமையில் மூன்று அணிகள் வெளிப்படையாக இயங்கி வருகின்றன. இதைத் தவிர மறைமுக அணிகள் பல இருப்பதாக கூறப்படுகிறது.

சிலர் ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட அணிகளுக்கு ஆதரவு தெரிவித்து ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளனர். உதாரணமாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஈபிஎஸ் அணியில் இருப்பது போல பேசுகிறார். திடீரென தினகரனுக்கு ஆதரவாக கருத்து தெரிவிக்கிறார்.

இந்த நிலையில், இரட்டை இலை சின்னத்தைப் பெற லஞ்சம் கொடுத்ததாக கைது செய்யப்பட்ட தினகரன் திஹார் சிறையில் அடைக்கப்பட்டு ஜாமீனில் வெளியே வந்தார்.

சிறைக்குச் செல்லும் முன், “கட்சியினர் விருப்பப்படி அரசியலை விட்டு ஒதுங்குகிறேன்” என்று அறிவித்தார். ஜாமீனல் வந்த பிறகு “எந்த நோக்கத்துக்காக என்னை அரசியலில் இருந்து ஒதுங்கச் சொன்னார்களே, அது (இரு அணிகள் இணைப்பு) நடக்கவில்லை. ஆகவே மீண்டும் தீவிர அரசியலில் ஈடுபடப்போகிறேன்” என்றார்.

இந்த நிலையில் அவருக்கு ஆதரவு அளிக்க பல எம்.எல்.ஏக்களும் முன் வந்தார்கள். தினகரனை நேரடியாக சந்தித்து வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.

இதற்கிடையே பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலாவை சந்தித்து வந்த தினகரன், உற்சாகமாக களம் இறங்கினார். இதற்குள் முப்பதுக்கும் மேற்பட்ட எம்.எல்.ஏக்கள் தினகரனை ஆதரிப்பதாக தகவல்கள் வெளியானது.

தனது ஆட்சியே ஆட்டம் காண்கிறதே என்று முதல்வர் எடப்பாடி அச்சமடைந்தார். தனது இருப்பை வெளிப்படுத்த தலைமைச் செயலகத்தில் உள்ள அமைச்சர்களின் அறைகளில் எல்லாம் தனது படத்தையும் வைக்கச் சொன்னார்.

இன்னொருபுறம் தினகரனுக்கு பெருகும் எம்.எல்.ஏக்கள் ஆதரவைப் பார்த்து ஓ.பி.எஸ். அணியும் கிலியானது.

தினகரன் உற்சாகமாக வலம் வந்தார். “என்னை கட்சியைவிட்டு ஒதுக்கிவைக்கவோ, பதவியை விட்டு நீக்கவோ அமைச்சர்களுக்கு அதிகாரம் இல்லை” என்று முழங்கினார்.

அ.தி.மு.க.வைப் பொறுத்தவரை ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ்., தினகரன்.. மூன்று அணிகளுமே மத்திய பாஜக அரசுக்கு கட்டுப்பட்டு இயங்குகின்றன என்பது ஊரறிந்த ரகசியம். இடையே தினகரன் கட்டுப்பாட்டில் உள்ள நமது எம்.ஜி.ஆர். நாளிதழில் மத்திய பாஜக அரசை விமர்சித்து “கவிதை” (?) ஒன்று வெளியானதோடு சரி. தவிர நாஞ்சில் சம்பத் அவ்வப்போது “மத்திய பாஜக அரசு திராவிடத் தலைவர் தினகரனை அரசியல் ரீதியாக ஒழிக்க முயல்கிறது” என்று முழங்கி வருகிறார். இதையெல்லாம் காமெடியாகவே அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.

மற்றபடி தினகரனும் மத்திய பாஜக அரசுக்கு அஞ்சியே இருக்கிறார் என்பது வெளிப்படை. மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள டில்லி போலீசாரால் “சின்ன” வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டபோதும், மத்திய பாஜக அரசு பற்றி தினகரன் வாய் திறக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் இப்படி பம்மியவர், திடீரென எம்.எல்.ஏக்களை சந்தித்ததும், தன்னை கட்சியிலிருந்து விலக்க அமைச்சர்களுக்கு அதிகாரம் இல்லை என்று முழங்கியதும் அரசியல் வட்டாரத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

தனது ஆதரவு எம்எல்ஏக்கள் நான்கு பேருக்கு அமைச்சரவையில் இடம் அளிக்க வேண்டும் என்றும் தற்போது அமைச்சராக உள்ள நால்வரை விலக்க வேண்டும் என்பதும்தான் அவரது விருப்பம் என்று கூறப்பட்டது. இதையடுத்தே முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் எம்.எல்.ஏக்களின் ஆதரவை பெற்றார் என்றும் கூறப்பட்டது.
ஆனால் இதெல்லாமே இரண்டு நாட்கள்தான். அதன்பிறகு எம்எல்ஏக்கள் எவரும் தன்னை சந்திக்க வர வேண்டாம் என்று தடுத்துவிட்டார்.

பிறகு டில்லி செல்வதாகக் கூறி கிளம்பினார். ஆனால் அவர் டில்லி செல்லவில்லை என்று அவரது ஆதரவாளர்களே தெரிவிக்கிறார்கள். தவிர, தற்போது தினகரன் எங்கிருக்கிறார் என்பது தெரியாமல், குழம்பிப்போயிருக்கிறார்கள்.

இதற்குக் காரணம், டில்லியில் இருந்து வந்த எச்சரிக்கைதான் என்று கூறப்படுகிறது.
இன்னொரு புறம், “திஹார் சிறைில் அடைக்கப்பட்ட காலத்தில் தினகரன் உடல் சற்று நலிவுற்றது. ஆகவே ஆயுர்வேத மசாஜ் செய்து உடலைத் தேற்ற கேரளா சென்றிருக்கிறார்” என்றும் கூறப்படுகிறது.

ஆக திடீரென பொங்கி எழுந்த தினகரன் அமைதியாகிவிட்டார்.

“அடுப்பில் வைக்கப்பட்ட பால் பொங்கும்போது ஒரு துளி தண்ணீர் விட்டால் அடங்கும் அல்லவா.. அது போல டில்லியில் இருந்து ஏதோ ஒரு “செய்தி” அவருக்குச் சொல்லப்பட்டிருக்கிறது. அதுதான் அடங்கிவிட்டார்” என்று அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.