தினமலர் பங்குதாரர் ராகவன் மறைவு

திருச்சி:

பிரபல தமிழ் நாளிதழ் தினமலர் நிறுவனர்  டிவி ராமசுப்பைய்யர் மகனும், தினமலர் பங்குதாரருமான  ஆர். ராகவன் திருச்சியில் அவரது இல்லத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) மதியம் காலமானார்.

டி.வி. ராமசுப்பையர் –- கிருஷ்ணம்மாள் தம்பதியரின் நான்காவது மகனாக, 16.11.1937ல் நாகர்கோயிலில் பிறந்தார் ஆர். ராகவன்.

தந்தை ராமசுப்புவுக்கு துணையாக தினமலர் நாளிதழில் பணியில் தன்னை இணைத்துக்கொண்டார்.

தினமலர் விற்பனை பிரிவில் தன்னை ஈடுபடுத்திக்கொண்ட இவர் தமிழகம் முழுதும் பயணித்து சிற்றூர்களிலும் தினமலர் கிடைக்க வழி ஏற்படுத்தினார். தினமலர் இதழின் வெற்றிக்கு முக்கிய தூண்களில் ஒருவராக விளங்கினார்.

இவரது மனைவி சுப்புலட்சுமி.  இவர்களுக்கு இரு மகன்கள். மூத்தவர், தினமலர் இணை ஆசிரியர் முனைவர் ஆர். ராமசுப்பு. இவர் இதழியலில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். இளையவர், தினமலர் இணை ஆசிரியர் ஆர்ஆர். கோபால்ஜி. இவர் சட்டம் பயின்றுள்ளார்.

திருச்சியில் குடும்பத்துடன் வசித்து வந்த ஆர்.ராகவன், உடல் நலக்குறைவால்  இன்று பகல் ஒரு மணியளவில் காலமானார்.

திருச்சி கன்டோன்மென்ட் பறவைகள் சாலையில் அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், அமைப்புகளின் நிர்வாகிகள், சினிமா பிரபலங்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இறுதிச் சடங்குகள் நாளை (அக்.11) மதியம் 3 மணிக்கு திருச்சி ஸ்ரீரங்கம் கொள்ளிடக் கரையில் நடைபெறவுள்ளது.

கார்ட்டூன் கேலரி