திமுக கொள்கைப் பரப்பு செயலாளர்களாக திண்டுக்கல் ஐ.லியோனி, சபாபதி மோகன் நியமனம்! துரைமுருகன்

--

 சென்னை: திமுக கொள்கைப் பரப்பு செயலாளர்களாக பட்டிமன்றப் பேச்சாளர் திண்டுக்கல் ஐ.லியோனி மற்றும் சபாபதி மோகன் ஆகியோரை திமுக தலைமை  கழகம் நியமனம் செய்துள்ளது. இதுதொடர்பாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

திமுகவின் கொள்கை பரப்பு செயலாளர்களாக இருந்து வந்த ஆ.ராசா, தங்க தமிழ்ச்செல்வன் ஆகியோர் வேறு பதவிகளில் நியமிக்கப்பட்டதால், திமுகவின் புதிய கொள்கைப் பரப்பு செயலாளர்களாக திண்டுக்கல் ஐ.லியோனி, சபாபதி மோகன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக, துரைமுருகன் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், “திமுக கொள்கைப் பரப்பு செயலாளர்களாக, பொறுப்பு வகித்து வந்த ஆ.ராசா எம்.பி., துணைப் பொதுச் செயலாளராகவும், தங்க தமிழ்ச்செல்வன் மாவட்டப் பொறுப்பாளராகவும் நியமிக்கப்பட்டதால், அவர்கள் கொள்கைப் பரப்பு செயலாளர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்படுகிறார்கள்.

அவர்களுக்குப் பதிலாக, கொள்கைப் பரப்பு செயலாளராக பொறுப்பு வகித்து வரும் திருச்சி சிவா எம்.பி.யுடன், திமுக சட்டதிட்ட விதி: 18, 19-ன்படி, திண்டுக்கல் ஐ.லியோனி, சபாபதி மோகன் ஆகியோர் கொள்கைப் பரப்பு செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல் ஐ.லியோனி புகழ்பெற்ற பட்டிமன்றப் பேச்சாளர், நடுவர், மேடைப் பேச்சாளர் ஆவார். சபாபதி மோகன், மனோன்மணியம் பல்கலை. முன்னாள் துணைவேந்தர் ஆவார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.