திண்டுக்கல்

பாஸ் இல்லாமல் திண்டுக்கல் மாவட்டத்துக்கு வந்த இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத்தை காவல்துறையினர் திருப்பி அனுப்பி உள்ளனர்.

கொரோனா பாதிப்பு காரணமாக தற்போது மாநிலம் எங்கும் மண்டலம் மண்டலமாகப் பிரிக்கப்பட்டுள்ளன. ஒரு மண்டலத்தில் இருந்து மற்றொரு மண்டலம் செல்ல இ பாஸ் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.   மண்டல எல்லைகளில் வாகனங்கள் சோதிக்கப்பட்டு இ பாஸ் இல்லாமல் வருவோர் திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றனர்.

அவ்வகையில் திண்டுக்கல் மண்டலத்துக்குள் வருவோரைக் கரூர், திருப்பூர், திருச்சி எல்லைகளில் சோதனைச்சாவடிகள் அமைத்து காவல்துறையினர் தீவிரமாகச் சோதித்து வருகின்றனர்.   திருச்சி எல்லை வழியாக ஒரு வாகனத்தில் போலி இ பாஸ் மூலம் ஒரு வாகனம் நுழைய முயன்றதால் சோதனை மேலும் தீவிரமாக்கப்பட்டுள்ளது.

இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் கரூர் மாவட்டத்தில் இருந்து திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூருக்கு ஒரு வாகனத்தில் சென்றுள்ளார்.  அவரிடம் எல்லையில் அமைந்துள்ள சோதனைச்சாவடி காவல்துறையினர் இ பாஸ் கேட்டுள்ளனர்.  அவரிடம் இ பாஸ் இல்லாததால் அவரை திண்டுக்கல் மாவட்டத்தில் நுழைய விடாமல் திருப்பி அனுப்பப்பட்டுள்ளார்.