சென்னை:

திண்டுக்கல் மாவட்ட ரஜினி மன்ற பொறுப்பாளர்கள் கூண்டோடு விலகுவதாக அறிவித்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்ட ரஜினி மக்கள் மன்ற செயலாளராக எஸ்.எம்.தம்புராஜ் நியமிக்கப்பட்டிருந்தார். கடந்த சில வாரங்களுக்கு முன்தான் இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது.  இந்த நிலையில் அந்த பொறுப்பில் இருந்த எஸ்.எம்.தம்புராஜ் இன்று திடீரென நீக்கப்பட்டார்.

இது குறித்து ரஜினி மக்கள் மன்ற தலைமையகம் வெளியிட்ட அறிக்கையில், “தம்புராஜ், மன்றத்தின் ஒற்றுமைக்கும், ஒழுக்கத்துக்கும் கட்டுப்பாட்டுக்கும் முரணாக செயல்பட்டதால் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து தற்காலிகமாக நீக்கப்படுகிறார்.

ரஜினி மன்ற நிர்வாகிகள் யாரும் அவருடன் எந்த தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது. அதுவரையில் திண்டுக்கல் மன்ற செயலாளர் பொறுப்பை மாவட்ட பொறுப்பாளர் அரவிந்த் கவனிப்பார். அவருக்கு மன்ற நிர்வாகிகள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். ரஜினிகாந்தின் ஒப்புதலின் பேரில் இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இப்படி தம்புராஜ் நீக்கப்பட்டு, அரவிந்தன் பொறுப்பில் நியமிக்கப்பட்டது திண்டுக்கல் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் ரஜினி ரசிகர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

“தம்புராஜ் 35 வருடங்களாக மன்றத்தில் செயல்பட்டு வருகிறார். ரசிகர்களை அன்போடு அரவணைத்துச் செல்கிறார். ஆனால் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அரவிந்த், மன்றத்துக்க தொடர்பே இல்லாதவர்” என்று இவர்கள் குமுறுகிறார்கள்.

மேலும் இந்த நடவடிக்கையை எதிர்த்து திண்டுக்கல் மாவட்ட ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் 147 பேர் கூண்டோடு ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளனர்.