டில்லி

டில்லி காவல் துறை வட்டாரங்கள் இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுத்த வழக்கில் டி டி வி தினகரனின் பெயரை குற்றப் பத்திரிகையில் சேர்க்கப்படலாம் என தெரிவித்துள்ளது.

இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுக்க முயன்றதாக இடைத் தரகர் சுரேஷ் சந்திர சேகர் கைது செய்யப்பட்டார்.   விசாரணையின் போது சுரேஷ் சந்திரசேகரின்  தொலைபேசி உரையாடல் பதிவு சிக்கியது.   அதில் அவருடன் பேசியது டிடிவி தினகரன் என கூறப்பட்டது.   அதை ஊர்ஜிதம் செய்ய தினகரனின் குரல் மாதிரியை டில்லி காவல்துறை கோரியது.   ஆனால் தினகரன் அதற்கு மறுப்பு தெரிவித்து விட்டார்.

தற்போது தினகரன் பல தொலைக்காட்சிகளுக்கு பேட்டி அளித்துள்ளார்.  அந்த பேட்டிகளை பதிவு செய்த டில்லி காவல்துறை அதை ஆய்வு செய்துள்ளது.   அப்போது தினகரனின் குரலும்,  சுரேஷ் சந்திரசேகருடன் தொலைபேசியில் பேசிய குரலும் மிகவும் ஒத்துப் போவதை டில்லி போலீஸ் கண்டு பிடித்துள்ளது.  இதனால் அடுத்த வாரம் தாக்கல் செய்யப்பட உள்ள குற்ற பத்திரிகையில் தினகரனின் பெயரை சேர்க்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

முதல் குற்றப்பத்திரிகையில் தினகரன் பெயர் இடம் பெறவில்லை.   ஆனால் தற்போது வழங்கப்படும் கூடுதல் குற்றப்பத்திரிகையில் டிடிவி தினகரன் பெயர் இடம் பெறும் இன்றும்  அதற்கு ஆதாரமாக குரல் ஆய்வின் முடிவு அறிக்கை சேர்க்கப்படும் எனவும் சொல்லப்படுகிறது.