மஸ்கட்:

பாலஸ்தீனம், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஓமன் ஆகிய 3 நாடுகளுக்கு பிரதமர் மோடி சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். இதில் ஓமன் நாட்டில் உள்ள சுல்தான் குவபூஸ் விளையாட்டரங்கில் அங்கு வாழும் இந்தியர்கள் மத்தியில் மோடி கலந்துரையாடும் நிகழ்ச்சிக்கு இந்திய தூதரகம் ஏற்பாடு செய்திருந்தது.

இதில் பெரிய அளவில் கூட்டத்தை கூட்ட தூதரக அதிகாரிகள் திட்டமிட்டிருந்தனர். ஓமன் மக்கள் தொகையில் 20 சதவீதம் பேர் இந்தியர்கள். முதல் கட்டமாக இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யப்பட்டது.

அடுத்த கட்டமாக இந்தியர்கள் அதிகம் பணியாற்றும் நிறுவனங்களுக்கு தூதரகம் ஒரு கடிதம் எழுதியுள்ளது. அதில் இந்திய தொழிலாளர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஏதுவாக அரை நாள் விடுப்பு அளி க்கும்படி கேட்டுக் கொண்டிருந்தது.

சில நிறுவனங்களுக்கு அளித்துள்ள கடிதத்தில் எத்தனை தொழிலாளர்களை அனுப்பிவைக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது. இதில் 80 சதவீதம் பேர் ப்ளூ காலர் தொழிலாளர்களாக இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு வந்து செல்ல போக்குவரத்து வசதி ஏற்பாடு செய்து கொடுக்கவும் வலியுறுத்தப்பட்டிருந்தது.

அதோடு மஸ்கட்டில் செயல்படும் இந்திய பள்ளிகளில் பயிலும் 6 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களை வாகன வசதி ஏற்பாடு செய்து அனுப்பி வைக்குமாறு பள்ளி நிர்வாகங்களுக்கு தூதரக அதிகாரிகள் கடிதம் எழுதியுள்ளனர்.