சென்னையில் பரவும் தொண்டை அழற்சி நோய் : சுகாதாரத் துறை எச்சரிக்கை

சென்னை

டிப்தீரியா என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் தொண்டை அழற்சி நோய் சென்னையில் பரவி வருவதாக பொதுச் சுகாதாரத்துறை இயக்குநரகம் எச்சரித்துள்ளது.

டிப்தீரியா எனப்படும் தொண்டை அழற்சி நோய் குழந்தைகளைத் தாக்கும் கொடிய நோய் ஆகும். இந்த நோய் தும்மல் மற்றும் இருமும் போது தொண்டையில் உள்ளே நுழையும் பாக்டீரியாவினால் உண்டாகிறது. இந்த நோய்க்கான அறிகுறிகள் தொண்டைக்கட்டு, ஜுரம் கழுத்தில் உள்ள கிளான்ட்ஸ் வீக்கம் உள்ளிட்டவை ஆகும். உள்நாக்கு வளரும் போதும் தொண்டைக் கட்டு ஏற்படும் என்பதால்  இந்த நோயைப் பலர் உதாசீனம்செய்டு விடுகின்றனர்.

இந்த நோயால் தாக்கப்பட்ட குழந்தைகளுக்கு மூச்சும் குழாய் அடைப்பு, வாதம்,மற்றும் இருதய அடைப்பு, நரம்பு, நுரையீரல் மற்றும் சிறுநீரக பாதிப்பு  ஏற்படக்கூடும். இதற்குத் தடுப்பு மருந்து உள்ளது. இந்த மருந்தை 1.5 வயது, 2.5 வயது மற்றும் 3.5 வயதில் கொடுக்க வேண்டும். மற்றும் இதற்கான பூஸ்டர் மருந்து 5 வயதில் தர வேண்டும். இவற்றில் ஒன்று கூட தவறக் கூடாது.

நேற்று மற்றும் நேற்று முன் தினம் இரு குழந்தைகள் இந்த  நோயால் பாதிக்கப்பட்டதைக் குழந்தைகள் நல மருத்துவத் துறை கண்டறிந்துள்ளது. இந்த குழந்தைகள் 7 மற்றும் 13 வயதானவர்கள் ஆவார்கள். இவர்கள் பம்மல் மற்றும் ஏழு கிணறு ஆகிய பகுதிகளில் வசிப்பவர்கள் ஆவார்கள். இதையொட்டி சுமார் 50 செவிலியர்கள் அந்த பகுதியில் உள்ள பால்வாடிகள் மற்றும் பள்ளிக்குழந்தைகளுக்கு தடுப்பூசி அளித்தனர். சுமார் 4000க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

வழக்கமாகப் பல ஆரம்பச் சுகாதார நிலையங்களில் புதன் மற்றும்  வெள்ளிக் கிழமைகளில் தடுப்பூசிகள் போடப்படுவது வழக்கமாகும். இந்த பணி உடனடியாக நிறுத்தப்பட்டு அனைத்து செவிலியர்களும் அவரவர் பகுதியில் உள்ள குழந்தைகளுக்குப் பள்ளிகளுக்குச் சென்று தடுப்பூசி போட்டுள்ளனர். அரசு அனைத்து குழந்தைகள் நல மருத்துவர்கள் மற்றும் இதர மருத்துவர்கள் தொண்டை அழற்சியின் அறிகுறி உள்ள குழந்தைகள் குறித்து உடனடியாக சுகாதாரத்துறைக்குத் தகவல் அளிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது.

கார்ட்டூன் கேலரி