சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்தின் கீழ் இருக்கும் அனைத்து நீதிமன்றங்களிலும் நேரடி விசாரணை நடத்த நீதிபதிகள் நிர்வாகக் குழு முடிவெடுத்திருக்கிறது. அதன்படி வரும் 7ந்தேதி முதல் நேரடி விசாரணை தொடங்கப்படலாம் என தெரிகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஓரிரு நாளில் வெளியாகும்.

கொரோனா தொற்று பரவல் தடுப்பு காரணமாக கடந்த மார்ச் மாதம் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டதால், நாடு முழுவதும்  நீதிமன்றங்களும் மூடப்பட்டன.  முக்கியமான வழக்குகள் மட்டும் காணொளி வாயிலாக விசாரிக்கப்பட்டு வந்தது. தற்போது ஊரடங்கில் பல்வேற தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பு வருகிறது.

இதையடுத்து, கடந்த ஆகஸ்டு மாதம் முதல், சென்னை உயர்நீதிமன்றத்திலும் திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருக்கும் கீழமை நீதிமன்றங்களிலும் நேரடி வழக்கு விசாரணை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி  கடந்த மாதம் 7ம் தேதியில் இருந்து சென்னை உயர்நீதி மன்ற்ததில்  நேரடி வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில்  கீழ் செயல்படும் அனைத்து நீதிமன்றங்களிலும் நேரடி வழக்கு விசாரணை நடத்த தலைமை நீதிபதி தலைமையிலான நிர்வாகக்குழு தீர்மானம் செய்திருக்கிறது.

அக்டோபர் 7ம் தேதியில் இருந்து நேரடி விசாரணை தொடங்குவது குறித்து நீதிபதிகள் அனைவரிடமும் கருத்து கேட்ட பிறகு, முடிவெடுக்கப்படும் என்றும் இது தொடர்பான அறிவிப்பு வரும் வியாழக்கிழமை வெளியாகும் என்றும் அக்கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.