மாவட்டத்தில் 15 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள்… கடலூர் ஆட்சியர் அறிவிப்பு

--

கடலூர்:

டலூர் மாவட்டத்தில் விவசாயிகளின் வேண்டுகோளுக்கு இணங்க 15 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படும் என்று மாவட்ட  கலெக்டர் சந்திரசேகர் கூறியுள்ளார்.

விவசாயிகளிடம் இருந்து குறுவை நெல் கொள்முதல் செய்யும் வகையில், நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க உத்தரவிடப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கடலூர் மாவட்ட கலெக்டர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

நடப்பு குறுவை பருவத்தில் கடலூர் மாவட்டத்தில் ஏறத்தாழ இருபத்து ஐந்து ஆயிரம் எக்டரில் நெல் சாகுபடி செய்து தற்போது அறுவடை துவங்கி உள்ள நிலையில் விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று 2019-20 கொள்முதல் பருவத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலமாக 15 இடங்களில் முதல் கட்டமாக நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இதில் தற்போது புவனகிரி வட்டத்தில் 3 கிராமங்களிலும், ஸ்ரீமுஷ்ணம் வட்டத்தில் 5 கிராமங்களிலும், திட்டக்குடி வட்டத்தில் 2 கிராமங்களிலும், விருத்தாசலம் வட்டத்தில் 3 கிராமங்களிலும், சிதம்பரம் மற்றும் காட்டுமன்னார்கோயில் வட்டங்கலில் தலா 1 கிராமத்திலும் ஆக மொத்தம் 15 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளன.

நடப்பு கொள்முதல் பருவத்திற்கு மத்திய அரசு சன்னரகத்திற்கு அறிவித்த குறைந்த பட்ச ஆதரவு விலை குவிண்டாலுக்கு ரூ.1835 உடன் தமிழக அரசு போனஸ் தொகையாக ரூ. 70-ஐயும் சோ்த்து மொத்தம் ரூ.1905 விவசாயிகளுக்கு வழங்கப்படும். இதே போன்று மத்திய அரசு சாதாரன ரகத்திற்கு அறிவித்த குறைந்த பட்ச ஆதரவு விலை குவிண்டாலுக்கு ரூ.1815 உடன் தமிழக அரசு போனஸ் தொகையாக ரூ.50-ஐயும் சோ்த்து மொத்தம் ரூ.1865 விவசாயிகளுக்கு வழங்கப்படும்.

எனவே, குறுவை நெல் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் தங்களது விளை நெல்களை அருகிலுள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்று பயனடைய கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இவ்வாறு கலெக்டர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.