ரஜினியின் புதிய படத்துக்கு ஏ.ஆர். முருகதாஸ் வைத்த அரசியல் டைட்டில்!

இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் ரஜினி நடிக்கும் புதிய படம் குறித்த தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

விஜய் நடிக்க ஏ.ஆர்.முருகதாஸ்  இயக்கி சமீபத்தில் வெளியான சர்கார் படம், அரசியலை   மையப்படுத்தி  உருவாகியிருந்தது.  இதில்   சுந்தர் ராமசாமி என்ற கதாபாத்திரத்தில் நடிகர் விஜய் நடித்திருந்தார். அவருக்கு இணையாக கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார். மேலும் வரலட்சுமி சரத்குமார், யோகி பாபு, பழ.கருப்பையா, ராதாரவி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்தனர்.

இந்தப் படம் வெளியானபோது கதைத் திருட்டு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் எழுந்தன. ஆனாலும் பிரச்சினைகளைக் கடந்து படம் பெரு வெற்றி பெற்றது.

இந்த நிலையில் ரஜினியின் அடுத்த படத்துக்கு ஏ.ஆர். முருகதாஸ் கதை கூறியதாகவும் அவர் கூறிய இரு கதைகளில் அரசியல் களம் உள்ள கதையை ரஜினி தேர்ந்தெடுத்ததாகவும் தகவல் வெளியானது.

இதுகுறித்து சமீபத்தில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், ரஜினிகாந்தின் ஒப்புதலுக்காக காத்திருப்பதாக தெரிவித்தார்.

மேலும் ரஜினி – முருகதாஸ் இணையும் புதுப்படத்தை  லைகா நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும், படத்தின் ஒளிப்பதிவாளராக சந்தோஷ் சிவன் ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.

தற்போது இந்தப் படத்துக்கு நாற்காலி என்று படக்குழு தலைப்பிட்டுள்ளதாக கோடம்பாக்கம் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு ரஜினியின் பிறந்தநாளான  டிசம்பர் 12-ம் தேதி வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

 

 

 

 

 

 

கார்ட்டூன் கேலரி