ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோர் காவல்துறையினரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது மர்மமான முறையில் உயிரிழந்திருக்கும் நிகழ்வை அனைத்து அரசியல் கட்சிகளும், திரையுலகினரும் , பொது மக்களும் கண்டித்துள்ளன.

இந்நிலையில் இயக்குநர் ஹரி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.

“காவல்துறையில் உள்ள சிலரின் இந்த அத்துமீறல் அந்தத் துறையையே இன்று களங்கப்படுத்தியுள்ளது. காவல்துறையை பெருமைப்படுத்தி ஐந்து படங்கள் எடுத்ததற்காக இன்று மிகவும் வேதனைப்படுகிறேன்”.என கூறியிருந்தார்.

‘சாமி’, ‘சிங்கம்’, ‘சிங்கம் 2’, ‘சிங்கம் 3’, ‘சாமி ஸ்கொயர்’ எனக் காவல்துறையை மையமாக வைத்துப் படம் இயக்கியுள்ளார் ஹரி என்பது குறிப்பிடத்தக்கது .

https://www.facebook.com/arun.vaidyanathan/posts/10157664976711871

ஹரியின் இந்தக் கருத்துக்கு எதிர் கருத்து தெரிவித்திருக்கும் இயக்குநர் அருண் வைத்தியநாதன், “சாத்தான் குளத்தில் நடந்த சம்பவத்தை கண்டிக்கிறேன். அதே நேரத்தில் ஒட்டுமொத்த போலீஸ் படையும் மோசமானது, கொடூரமானது என்ற கருத்தை நான் ஏற்றுக் கொள்ளவில்லை. கோவிட் 19 பரவிய ஆரம்ப காலகட்டத்தில் தமிழகம் முழுவதும் போலீசாரால் பல நல்ல முயற்சிகள் செய்யப்பட்டன என்பதை தயவு செய்து மறந்துவிடாதீர்கள். சில கருப்பு ஆடுகளுக்காக ஒட்டுமொத்த துறையையும் மோசமானவர்கள் என்று பட்டியலிடுவதை நிறுத்துங்கள். எல்லா துறைகளிலும் கருப்பு ஆடுகள் உள்ளன.

சில திரைப்பட துறையைச் சேர்ந்தவர்கள், போலீசை பெருமைப்படுத்தி திரைப்படங்கள் இயக்கியதற்காக வெட்கப்படுகிறேன் என்று சொல்லும் நிலை உள்ளது. இது திரைப்பட ஸ்கிரிப்ட் அல்ல, சில லைக்குகளுக்காக இதுபோன்ற உணர்ச்சிகரமான கருத்துகளை தெரிவிக்க வேண்டாம் என கூறியுள்ளார் .