கே.பாக்யராஜ் ராஜினாமாவை ஏற்க  எழுத்தாளர் சங்கம் மறுப்பு

திரைப்பட எழுத்தாளர் சங்கத் தலைவர் பதவியை கே.பாக்யராஜ் ராஜினாமா செய்ததை சங்கத்தினர் ஏற்க மறுத்துவிட்டனர்.

தமிழ்த்திரைப்பட எழுத்தாளர்களுக்காக இயங்கி வருவது, தென்னிந்திய  திரைப்பட எழுத்தாளர் சங்கம். இந்த சங்கத்தில் 523 பேர் உறுப்பினர்களாக இருக்கின்றனர். கடந்த  மார்ச் மாதம் நடந்த  இயக்குநர் கே.பாக்யராஜ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்த நிலையில் இன்று தனது தலைவர் பதவியை கே.பாக்யராஜ் ராஜினாமா செய்துள்ளார். சமீபத்தில் சர்கார் படத்தின் கதை குறித்த சர்ச்சை ஏற்பட்டது. வருண்  ராஜேந்திரன் என்பவர், தனது கதையை சர்கார் பட இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் திருடிவிட்டதாக புகார் அளி்த்தார். இதில் வருண்  ராஜேந்திரன் கூறுவதே சரி என பாக்யராஜ் தெரிவித்தார்.

பிறகு இந்த பிரச்சினை நீதிமன்றத்துக்குச் சென்றது. அடுத்து, நீதிமன்றத்துக்கு வெளியே பேசித்தீர்த்துவிட்டதாக ஏ.ஆர். முருகதாஸ் அறிவித்தார். இதில் பாக்யராஜ் முக்கிய பங்கு வகித்தார்.

இதற்கிடையே  தெளிவுபடுத்துவதற்காக சர்கார் கதையை பாக்யராஜ் ஊடக பேட்டிகளில் தெரிவித்தார்.. இதற்கு சர்கார் பட இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

இந்த நிலையில் தனது பதவியை ராஜினாமா செய்த பாக்யராஜ் இது குறித்து அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

அதில், ” சர்க்கார் பட கதை விவகாரத்தில் நான் நியாயமாக நடந்துகொண்டேன். அதனால் எனக்கு சில அசௌகரியங்கள் ஏற்பட்டன. நான் தேர்தலில் போட்டியிடாமல் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டதுதான் இதற்குக் காரணம்.  என்னைப்போலவே நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் ராஜினாமா செய்வது நல்லது. பிறகு தேர்தல் நடக்கும்போது நான் போட்டியிடுகிறேன்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

மேலும், “சர்கார் பட விவகாரத்தில் நான் எவ்வளவோ கெஞ்சியும் இயக்குனர் முருகதாஸ் உடன்படவில்லை.   இதன் காரணமாகவே சன் பிக்சர்ஸ் போன்ற பெரிய தயாரிப்பாளரின் படத்தின் கதையை பற்றி வெளியே சொல்ல வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டேன். இருந்தாலும் அது தவறுதான். அதற்காக சர்கார் பட தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்சிடம் மன்னிப்பு கோருகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் கே.பாக்யராஜின் ராஜினாமாவை ஏற்க முடியாது என சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்து சங்கத்தின் பொதுச்செயலாளர் மனோஜ்குமார் மற்றும் செயற்குழு, பொதுக்குழுவினர் பாக்யராஜுக்கு எழுதியுள்ல கடிதத்தில், “தாங்கள் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக கொடுத்த கடிதத்தை நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் ஏற்க மறுத்துவிட்டனர். இதே கருத்து செயற்குழுவில் தீர்மானமாக இயற்றப்பட்டது. ஆகவே நீங்கள் சங்கத்தின் தலைவராக தொடர்கிறீர்கள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கார்ட்டூன் கேலரி